டிஜிட்டல் கேமராக்களைப் பயன்படுத்துவது பெருகி வரும் இந்நாளில், அவற்றைக் கையாள்வதிலும் பல தேவைகள் அதிகரிக்கின்றன. போட்டோக்களின் அளவுகளை மாற்றவும், போட்டோ பைல்களின் பார்மட்களை மாற்றவும் விரும்புகிறோம். இவற்றை ஒவ்வொன்றாக படங்களுக்கான அப்ளிகேஷன்களில் திறந்து நம் விருப்பத்திற்கேற்ப மாறுதல் செய்திட நமக்கு அதிக நேரம் எடுக்கிறது. இந்த தேவையை வேகமாக நமக்கு நிறைவேற்றும் புரோகிராம் ஒன்றை அண்மையில் இணையத்தில் பார்க்க நேர்ந்தது. அதன் பெயர் Fast stone Photo Resizer. இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, போட்டோக்களின் அளவு மற்றும் பார்மட்களை மிக எளிதாகவும், வேகமாகவும் மாற்றலாம்.
இது போல பல புரோகிராம்கள் இருந்தாலும், இதன் வேகம் குறிப்பிடத்தக்கதாகவும், செயல் திறன் நம்பிக்கை கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. இதனை http://www.faststone.org/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் போட்டோக்களில் ஓரளவிற்கு எடிட்டிங் வேலையையும் மேற்கொள்ளலாம்; சுழற்றி வைக்கலாம்.
மேலே குறிப்பிட்ட தளம் சென்றவுடன், அந்த இணையப் பக்கத்தில், கீழாக Fast Stone Photo Resizer இருப்பதனைக் காணலாம். இதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து கொள்ளவும். டவுண்லோட் செய்தவுடன், டெஸ்க்டாப் திரையில் ஒரு ஐகான் காணப்படும். இதன் மீது கிளிக் செய்து, இந்த அப்ளிகேஷனைத் திறக்கவும். முகப்புப் பக்கத்திலேயே, நீங்கள் மாற்றம் மேற்கொள்ள விரும்பும் போட்டோ பைல்களைத் தேர்ந்தெடுக்க வசதி கிடைக்கும். போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து Add பட்டன் கிளிக் செய்தால் போதும். தேர்ந்தெடுத்து முடித்த பின்னர், அடுத்து இந்த படங்களில் என்ன மாற்றம் செய்திட விரும்புகிறீர்கள் என்று காட்ட வேண்டும். போட்டோக்களின் அளவினை மாற்ற விரும்பினால், Advanced Options பட்டன் கிளிக் செய்து, Resize பாக்ஸ் தேர்ந்தெடுக்க வேண்டும். இது மேலாக இடது புறம் காணப்படும். இதில் Standard Size என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது நீங்கள் விரும்பும் அளவைக் குறிப்பிடலாம். அளவு குறித்த தேர்வை அமைத்த பின்னர், ஓகே பட்டனில் கிளிக் செய்திடலாம். அடுத்து, எந்த போல்டரில் அளவு மாற்றப்பட்ட படங்கள் சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனைக் காட்டவேண்டும். மீண்டும் Browse கிளிக் செய்தால் Browse For Folder என்ற விண்டோ திறக்கப்படும். இதில் போல்டரைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டோக்கள் அனைத்தும், குறிப்பிட்ட அளவில் மாற்றப்பட்டு சேவ் செய்யப்படும். இதே போல மொத்தமாகவும் பார்மட் மாற்றங்களை மேற்கொள்ளலாம். இந்த சாப்ட்வேர் புரோகிராமினைச் சோதனை செய்வதற்காக, 106 போட்டோக்களைத் தேர்ந்தெடுத்து அளவை மாற்றினேன். முதலில் இவற்றிற்கு 250 எம்பி இடம் தேவைப்பட்டது. அளவு மாற்றியவுடன் இவை எடுத்துக் கொண்ட இட அளவு 16.9 எம்.பி. எடுத்துக் கொண்ட நேரம் 9 நிமிடங்களே. இணையத்திற்கு அப்லோட் செய்து மாற்றியிருந்தால், நிச்சயம் அதிக நேரம் ஆகி இருக்கும். அடிக்கடி போட்டோக்களைக் கையாள்பவர்கள் இந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தலாம்.