
ரசிகர்களின் ரேட்டிங் என்றால் டிவிட்டரில் திரைப்படம் தொடர்பாக ரசிகர்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களின் அடிப்படையிலான மதிப்பீடு. புதிய படங்களை பார்த்ததுமே அது பற்றிய கருத்தை குறும்பதிவாக பதிவுசெய்யும் பழக்கம் ரசிகர்கள் மத்தியில் உருவாகி விட்டது. பல படங்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடிய அளவுக்கு தற்போது இவை அமைந்துவிட்டது.
டிவிட்டரில் பகிரப்படும் கருத்துக்களின் அடிப்படையில் திரைப்படங்களை மதிப்பிட உதவும் தளங்களும் பல இருக்கின்றன. டிவிட்பிலிக்ஸ் தளமும் இந்த ரகத்தை சேர்ந்தது தான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக படங்களுக்கான ரேட்டிங்கை டிவிட்டர் கருத்துக்கள் அடைப்படையில் முன் வைக்கிறது.
அதாவது ஒரு படத்தை ரசிகர்கள் எந்த அளவுக்கு விரும்புகின்றனர் என்பதை மதிப்பிட்டு சொல்கிறது. முகப்பு பக்கத்தில் இடம் பெற்றுள்ள படங்களுக்கான போஸ்டரை கிளிக் செய்தால் அந்த படத்திற்கான டிவிட்டர் மதிப்பீடு சதவீத்தில் காட்டப்படுகிறது.
அப்படியே படம் வெளியான காலம், மற்றும் அதன் நீளம் ஆகிய விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது. கூடவே அந்த படம் தொடர்பான டிவிட்டர் செய்திகளின் எண்ணிக்கை மற்றும் அன்றைய தினத்தில் எத்தனை டிவிட்டர் பதிவுகள் என்னும் தகவலும் இடம் பெறுகிறது.
அதன் கீழே படத்தை பிடிச்சிருக்கு என்று சொன்னவர்களின் டிவிட்டர் பதிவுகளும் அருகிலேயே எனக்கு பிடிக்கவில்லை என்று சொனனவர்களின் கருத்துக்களும் வரிசையாக தோன்றுகின்றன. படங்களின் ரேட்டிங் கைகொடுக்கிறதோ இல்லையோ இந்த எதிரும் புதிருமான டிவிட்டர் பதிவுகளை படித்து பார்த்தால் படத்தில் எதை ரசிக்கலாம்,என்ன எதிர்பார்க்கலாம் என்ற தெளிவு ஏற்படும்.
அந்த புரிதலோடு திரையரங்கத்திற்கு போகலாம். நிச்சயம் ஹாலிவுட் பட பிரியர்களுக்கு வரப்பிரசதம் இந்த தளம்.