Home » » இசையோடு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்




பாடல்கள் மூலமே மனதில் உள்ளதை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? மியூஸிட் இணையதளம் இதை தான் அழகாக செய்கிறது.பகிர்தலை முற்றிலும் இசைமயமாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது. அதாவது நண்பர்களிடம் எதை சொல்ல நினைக்கிறோமோ அந்த செய்தியை வார்த்தைகளில் அல்லாமல் பாடலாக சொல்ல வழி செய்கிறது இந்த தளம்.
சில நேரங்களில் மனதில் உள்ளதை சொல்ல நினைக்கும் போது அதற்கான வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறுவோம். ஆனால் ஏதாவது ஒரு பாடலில் மிக அழகாக அந்த உணர்வை ஒரு கவிஞர் வரிகளாக்கியிருப்பார். அதை கேட்டதுமே மனம் துள்ளி குதிக்கும். இத்தகைய பாடல் வரிகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது மியூஸிட்.
பாடல்கள் வடிவில் உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்து கொள்ள உதவும் சேவை என்றவுடன் காதலர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தோன்றினாலும் கூட எல்லோரும் எல்லாவிதமான உணர்வுகளை இசை மயமாக பகிர இந்த தளம் கைகொடுக்கும்.
பிறந்த நாள் வாழ்த்து சொல்ல, நண்பர்களை ஊக்கப்படுத்த, தூக்கத்தில் இருந்து துயிலெழுப்ப, நன்றி தெரிவிக்க, கவலைப்படாதே என்று சொல்ல என எந்த விதமான உணர்வுக்கும் ஏற்ற பாடல்களை பகிர்ந்து கொள்ளலாம்.
முகப்பு பக்கத்திலேயே இப்படி பலவிதமான உணர்வுகளுக்கான பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பொருத்தமான பாடலை தெர்வு செய்து அதனை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். மின்னஞ்சல் மூலமும் பாடல்களை அனுப்பலாம்.
இணையவாசிகள் வசதிக்காக பலவகையான தலைப்புகளின் கீழ் பாடல்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. தேவை என்றால் இணையவாசிகள் தங்களுக்கு பொருத்தமான பாடலை தேடிப்பார்த்து பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.
யூடியூப் தளத்தில் இருந்து பொருத்தமான பாடல் தேடித்தரப்படுகிறது. அதனை ஓட விட்டு தேவையான இடத்தில் மட்டும் கட் செய்து அந்த இசை துண்டை மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.
ஒருவர் தேடி எடுக்கும் வரிகள் அப்படியே இந்த தளத்தில் சேமித்து வைக்கப்பட வகைபடுத்தவும் செய்யப்படுகிறது. எனவே பொருத்தமான பாடல் வரி தெரியாதவர்கள் இதில் இருந்து எடுத்து கொள்ளலாம். எதையுமே இசை மயமாக சொல்ல நினைப்பவர்களுக்கு இந்த சேவை மிகுந்த உற்சாகத்தை அளிக்கும்.
யோசித்து பாருங்கள் கவலையில் ஆழ்ந்திருக்கும் நண்பரை உற்சாகப்படுத்த நினைக்கும் போது, கவலைப்படாதே சகோதரா என்று தேவாவின் குரலில் ஒலிக்கும் பாடல் வரியை அனுப்பி வைத்தால் எப்படி இருக்கும்.
அதே போலவே காதலி பேஸ்புக் பக்கத்தை திறந்ததுமே என் உயிர் நீ தானே என்னும் பாடல் காதலனிடம் இருந்து அனுப்பட்டால் எப்படி இருக்கும். இப்படி ஒவ்வொரு உணர்வுக்கும், சுழலுக்கும் பொருத்தமான பாடல்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.
அவர்றில் இருந்து நமக்கேற்ற பாடலை தேர்வு செய்து பகிர்ந்து கொள்ள உதவும் மியூஸிட் சேவையை இசை பிரியர்கள் நிச்சயம் விரும்புவார்கள். அதிலும் மனதில் அலைமோதும் உணர்வுகளை சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் இதனை மிகவும் விரும்புவார்கள்.
இந்த சேவையே கூட இத்தகைய உணர்வில் தான் பிறந்தது. இதன் நிறுவனரான ஆம்ரி கிலிங்கர் தனது காதலிக்கு கடிதம் ஒன்றை எழுத நினைத்த போது பொங்கும் நேசத்தை எல்லாம் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாமல் தவித்திருக்கிரார். அப்போது தான் அவருக்கு பாடல் வரியை பயன்படுத்தலாம் என்று தோன்றியிருக்கிறது.
அதன் பிறகு யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அனைவரும் மனநிலைக்கேற்ற பாடல்களை பகிர்ந்து கொள்ள உதவும் இந்த சேவையை உருவாக்கினார். நியூயார்க் டைம்ஸ் இந்த சேவையை பாடல் வரிகளை காதல் கடிதமாக மாற்றும் சேவை என்று வர்ணிக்கிறது.
இணையதள முகவரி
முகப்பு