
பிரமிட்டு என்பது பட்டைக்கூம்பு வடிவில் அமைந்த ஒரு கட்டிட அமைப்பு ஆகும். இதன் அடி பெரும்பாலும் சதுரமாக அமைந்திருக்கும். எனினும், இது முக்கோணம், வேறுவகைப் பல்கோணங்கள் ஆகிய வடிவங்களிலும் அமையலாம். இக் கட்டிடங்களின் நிறையில் பெரும் பகுதி அடிப்பகுதியில் அமைந்திருப்பதால், இவற்றின் புவியீர்ப்பு மையம் நிலத்துக்கு அண்மையில் அமைந்திருக்கும் இதனால், சில பழங்கால நாகரிக மக்கள் உறுதியான நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கு இந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
எல் காஸ்ட்டிலோ பிரமிட் ( El Castillo) என்பது மெக்சிக்கோவின் மாநிலமான யுகட்டானிலுள்ள தொல்பொருளியற் களப்பகுதியான சிச்சென் இட்சாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மெசோஅமெரிக்க படிக்கட்டுப் பிரமிட் ஆகும். எல் காஸ்ட்டிலோ என்பது "கோட்டை" என்னும் பொருள் தரும் ஸ்பானிய மொழிச் சொல்லாகும்.
9 ஆம் நூற்றாண்டளவில், மாயன் நாகரீக மக்களால் கட்டப்பட்ட இது குகுல்கன் (குவெட்சால்கோட்டில் (Quetzalcoatl) என்பதற்கான மாயன் மொழிச் சொல்) கடவுளுக்கான கோயிலாகப் பயன்பட்டது.