இருபது ஆண்டுகளுக்கு முன்னால், லினஸ் டோர்வால்ட்ஸ் தன்னுடைய புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் திட்டம் குறித்து, யூசர்நெட் என்ற அஞ்சல் குழுவில் அறிவித்த போது, அது உலகை வென்று வாகை சூடும் என எண்ணிப் பார்த்திருக்க மாட்டார். 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் இது பற்றி எழுதுகையில், சும்மா பொழுது போக்காகத்தான் இதனை உருவாக்குகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். 80386 ப்ராசசர் இயக்கம் பற்றித் தெரிந்து கொள்வதற்காகத்தான், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வடிவமைத் ததாகவும் பின் நாளில் எழுதினார். ஆனால் நடந்தது வேறு.
இன்று புதியதாக உருவாகும் அனைத்து ப்ராசசர்களும் லினக்ஸ் இயங்கும் வகையிலேயே அமைக்கப்படுகின்றன. லினக்ஸ் எந்த வகைக் கம்ப்யூட்டரையும், பெர்சனல் கம்ப்யூட்டர், நெட்புக், ஸ்மார்ட்போன் முதல் மெயின்பிரேம் வரை, மற்றும் பிற, என அனைத்து வகை கம்ப்யூட்டிங் பணிகளையும் எளிதாகவும், விரை வாகவும் மேற்கொள்ள உதவிடும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இன்று உருவெடுத்துள்ளது. டெல், எச்.பி. ஆரக்கிள், ஐ.பி.எம். என அனைத்து முன்னணி பெர்சனல் கம்ப்யூட்டர் நிறுவனங்களும் லினக்ஸ் சிஸ்டத்திற்குத் தொடக்கம் முதல் ஆதரவு அளித்தன. வர்த்தக ரீதியாக லினக்ஸ் சிஸ்டத்தினை எடுத்துக் கொண்ட ரெட் ஹேட் (Red Hat) நிறுவனம், இன்று 730 கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக இயங்கி வருகிறது.
லினக்ஸ் பெற்றுள்ள இந்த வெற்றி எளிதாக அதற்குக் கிடைக்கவில்லை. அது கடந்து வந்த பாதை முட்களும் தடைகளும் நிறைந்ததாகவே இருந்தது. மைக்ரோசாப்ட் இதற்கு முதல் எதிரியாக இருந்தது. தொழில் நுட்ப ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பல தொல்லைகளை மைக்ரோசாப்ட் தந்தது. அனைத்தையும் லினக்ஸ் சமாளித்து முன்னேறியது.
இன்று கம்ப்யூட்டர் உலகில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த மாற்றத்தில் லினக்ஸ் சிஸ்டம் சில நன்மைகளைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் மாற்றத்திற்கும் உதவி வருகிறது.
1. லினக்ஸ் எளிமை: லினக்ஸ் சிஸ்டம் தந்த இயக்கச் சூழ்நிலை, யூனிக்ஸ் இயக்கத்தினைப் பின்பற்றியே இருப்பதாக முதலில் குற்றம் சாட்டப் பட்டது. ஆனால், லினக்ஸ் அதன் தொடக்கத்தில் இருந்தே, புதிய கண்டுபிடிப்புடன் கூடிய நவீன தொழில் நுட்பம் தருவதாகவே அமைந்தது. வர்த்தக ரீதியாக யூனிக்ஸ் தொழில் நுட்பம், மிகவும் விலை உயர்ந்த ப்ராசசர்களில் மட்டுமே இயங்கியபோது, லினக்ஸ் வடிவமைத்த டோர்வால்ட்ஸ், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, மிகவும் விலை மலிவானதாக து86 ப்ராசசர்களில் இயங்க வைத்தார்.
2. அனைவருக்கும் சொந்தம்:லினக்ஸ் தொகுப்பின் இந்த வளர்ச்சி இன்டர்நெட் பயன்பாட்டின் மூலமே ஏற்பட்டது என்றால், அது மிகையாகாது. லினக்ஸ் கட்டமைப்பினை யார் வேண்டு மானாலும் திருத்தி அமைக்கும் வகையில் ஒரு திறந்த ஊற்றாகவே உள்ளது. உலகின் பெரிய வெற்றி பெற்ற ஓப்பன் சோர்ஸ் திட்டம் இதுவாகத்தான் இருக்கும். லினக்ஸ் இந்த உலகின் எண்ணிக்கை யிலடங்காத புரோகிராமர்களின் பங்களிப்பினால் உருவாகியுள்ளது; தொடர்ந்து உருவாகி வருகிறது. யார் வேண்டுமானாலும் இதன் குறியீடுகளைத்தரவிறக்கம் செய்திடலாம்; சோதனை செய்து பார்க்கலாம்; இதிலிருந்து கற்றுக் கொள்ளலாம்; மாற்றி அமைக்கலாம். இதற்கு எந்த கட்டணமும் இல்லை. தனிநபர் புரோகிராமர்கள் மட்டுமின்றி, நிறுவனங்களும் இதன் லினக்ஸ் கட்டமைப்பினை வளர்ப்ப திலும், மாற்றி அமைப்பதிலும் பங்களித்துள்ளன.
3.இன்டர்நெட் இணைந்து வளர்ச்சி: லினக்ஸ் வளர்ச்சி அடைய இன்டர்நெட் ஒரு கருவியாய் இருந்து உதவியதுபோல, இன்டர்நெட் வளர்ச்சி அடையவும் லினக்ஸ் உதவியாய் இருந்து வருகிறது. லினக்ஸில் இயங்கும் வெப் சர்வர்கள், இமெயில் சர்வர்கள், பைல் சர்வர்கள், டேட்டா பேஸ் அமைப்புகள் மற்றும் பல சாதனங்கள் இன்டர்நெட்டினை இயக்க உதவுகின்றன. லினக்ஸ் அமைப்பின் இயக்குநர் கூறியபடி, நீங்கள் எப்போ தெல்லாம் இன்டர்நெட்டினைப் பயன்படுத்துகிறீர்களோ, அப்போ தெல்லாம் லினக்ஸ் சிஸ்டத்தையும் பயன் படுத்துகிறீர்கள். எடுத்துக் காட்டாக, கூகுள் தேடல் சாதனங்களைப் பயன் படுத்தாதவர்கள் இருக்க முடியாது. கூகுளின் தேடல் சாதனங்கள் அனைத்தும் லினக்ஸ் சிஸ்டத்தில் தான் இயங்குகின்றன. யாஹூவின் பெரும் பாலான சர்வர்களும் அவ்வாறே இயங்குகின்றன.
4. டெஸ்க்டாப் லினக்ஸ்: டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் லினக்ஸ் பயன்பாடு மிக மிகக் குறைவே. டேட்டா மையங்களிலும் இணைய சர்வர்களிலும் லினக்ஸ் அதிகம் பயன்பட்டாலும், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் இதன் பயன்பாடு சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. மொத்தத்தில் 1% கூட இது இல்லை. சில நிறுவனங்கள் தங்கள் கம்ப்யூட்டர் களில் லினக்ஸ் தொகுப்பைப் பதிந்தே விற்பனை செய்தாலும், அதனைத் தொடர்ந்து பயன்படுத்துபவர் எண்ணிக்கை மிகவும் குறைவே. லினக்ஸ் சிஸ்டத்தினால், விண்டோஸ் சிஸ்டம் பெற்றுள்ள இடத்தினை சிறிது கூட அசைக்க முடியவில்லை. ஆனால் பல நாடுகளில், அரசு அலுவலகங் களில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் லினக்ஸ் பயன்பாட்டினைக் காண முடிகிறது. இதற்குக் காரணம் தங்கள் அலுவலர் களின் கம்ப்யூட்டர் பயன்பாட்டினைக் கட்டுப்பாட்டில் கொள்ள, நிர்வாகத்திற்கு லினக்ஸ் உதவுகிறது. மேலும் லினக்ஸ் இலவசம் என்பதால், செலவு குறைகிறது. இந்த வகையில் உபுண்டு லினக்ஸ் (Ubuntu Linux) டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பிரபலமாக இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ளது. வரும் 2015 ஆம் ஆண்டில், இது 20 கோடி டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் இடம் பெறும் என்று இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
5. மாறிவரும் சூழ்நிலைக்கு லினக்ஸ்: கம்ப்யூட்டர் பயன்பாட்டு வகையானது முற்றிலுமாக மாறி வருகிறது. பாரம்பரிய டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் பயன் பாட்டினை விட்டுவிட்டு, புதிய சாதனங்களுக்கு மக்கள் மாறி வருகின்றனர். எடுத்துக்காட்டாக, ஜப்பானில் 50% மின்னஞ்சல்கள், மொபைல் போன் மூலமே அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த வழக்கம், ஐரோப்பியா மற்றும் பிற ஆசிய நாடுகளிலும் பரவி வருகிறது.
அமெரிக்காவில் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்களில் பெரும்பாலானவற்றில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன் படுத்தப்படுகிறது. ஆண்ட்ராய்ட், லினக்ஸ் கெர்னலை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.
6. மைக்ரோசாப்ட் எதிரியா? லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தன் வருமானத்தைக் குறைக்கும் எதிரியாக, மைக்ரோசாப்ட் தொடக்கத்தில் கருதி யதாக நமக்குத் தகவல்கள் கிடைத்தன. ஆனால் பின்னர், மைக்ரோசாப்ட் சுசி லினக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, லினக்ஸ் உரிமங்களை வாங்கி, தன் வாடிக்கையாளர்களுக்கு மறு விற்பனை செய்தது. தொடர்ந்து இந்த விற்பனை ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
லினக்ஸ் தற்போது வெற்றி பெற் றுள்ள, அதிகப் பயனுள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் என உறுதியான பெயரைப் பெற்றுவிட்டது. இனி, இந்த நல்ல பெயரினைத் தொடர்ந்து பாதுகாப்பதே, லினக்ஸ் வழங்கும் நிறுவனங்களுக்குள்ள சவாலாகும்.
அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் வாங்குவதற்கு அதிகம் பணம் செலவழிக்க வேண்டும் என்ற நிலையில், இலவசமாக அனைத்தும் தரும் வகையில் ஆரம்பிக்கப்பட்டவை ஓப்பன் சோர்ஸ் இயக்கம். இந்த வகையில் உருவாக்கப்படும் புரோகிராம்கள் பெரும்பாலும் இலவசமாகவே நமக்குக் கிடைக்கின்றன என்பதனை நாம் அனைவரும் அறிந்துள்ளோம். எடுத்துக்காட்டாக ஓப்பன் ஆபீஸ் தொகுப்பு.
ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்களின் சிறப்பு அவை இலவசம் என்பது மட்டுமல்ல. எந்தவிதக் கட்டுப்பாடும் அற்றவைகளாக இந்த புரோகிராம்கள் மக்களை அடைய வேண்டும் என்ற நோக்கத்தினையே ஓப்பன் சோர்ஸ் கொண்டுள்ளது.
விண்டோஸ் உருவாக்கப்படும் முன்னரே, ஓப்பன் சோர்ஸ் இயக்கம் அமைக்கப்பட்டது. இதற்கு அடி கோலியவர் ரிச்சார்ட் ஸ்டால்மேன் (Richard Stallman) ஜி. என்.யு. (GNU) என இதனை அழைத்தார். (காண்க: www.gnu.org). சாப்ட்வேர் ஒன்றைப் பயன்படுத்து பவருக்கு அடிப்படையில் நான்கு வழிகளில் சுதந்திரம் இருக்க வேண்டும் என எண்ணினார். எந்த காரியத்திற்கும் அந்த புரோகிராமினை பயன்படுத்த, எப்படி அது செயல்படுகிறது என்பதனை அறிய, யாருடனும் அதனைப் பகிர்ந்து கொள்ள மற்றும் அதில் தேவைப்படும் மாற்றங்களை மேற்கொள்ள என நான்கு வகையான அடிப்படை சுதந்திரம் இருக்க வேண்டும் என இலக்கு வைத்தார்.
இந்த ஓப்பன் சோர்ஸ் இயக்கத்தின் ஒரு சிறப்பான திருப்பம் லினக்ஸ் என்னும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவானதாகும். பின்லாந்து நாட்டைச் சேர்ந்த லினஸ் டோர்வால்ட்ஸ், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அடிப்படைக் கட்டமைப்பினைத் தானே உருவாக்கினார். இது விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களுக்கான அடிப்படையைத் தந்தது. ஜி.என்.யு. திட்டத்தில் ஏற்கனவே உருவான சாப்ட்வேர் தொகுப்புடன், டோர்வால்ட்ஸ் உருவாக்கிய கெர்னல் அமைப்பினை இணைத்து உருவாக்கப்பட்டதுதான் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். பயன்படுத்துபவர்கள் தங்களின் தேவைகளுக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வகையில் இது உருவாக்கப் பட்டதனால், கம்ப்யூட்டர் உலகில் அனைவரின் கவனத்தையும் இது கவர்ந்தது. அதனாலேயே இன்று லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பல நிறுவனங்களால், அவர்களின் நோக்கங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இவற்றை தனிப் பதிப்புகள் என்று அழைக்காமல் டிஸ்ட்ரிபியூஷன்ஸ் (Distributions) என அழைக்கின்றனர்.
ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்றவற்றை நாம் ஏன் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்? என்ற வினாவிற்கு, நமக்குக் கிடைக்கும் முதல் பதில், அவை முற்றிலும் இலவசம் என்பதுவே. மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற தொகுப்பிற்கு முற்றிலும் இணையாக ஓப்பன் ஆபீஸ் தொகுப்பு இலவசமாகக் கிடைக்கிறது. இதனால் பணம் மிச்சமாகிறது.
அடுத்ததாக, இந்த புரோகிராம்களைப் பயன்படுத்திப் பார்ப்பதனால், நம்முடைய புரோகிராம் அறிவு வளர்கிறது. ஒரு சாப்ட்வேர் எப்படி செயல்படுகிறது என்று அறிய, எந்த ஒரு ஓப்பன் சோர்ஸ் புரோகிராமினையும் பார்த்து அறிந்து கொள்ளலாம். புரோகிராம் எழுதப்பட்ட குறியீடு வரிகளைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். வர்த்தக நோக்கில் அமைக்கப்படும், எம்.எஸ். ஆபீஸ், விண்டோஸ், அடோப் பேஜ் மேக்கர் போன்ற புரோகிராம்களுக்கு இந்த குறியீடு வரிகள், நாம் பணம் செலுத்தி வாங்கினாலும் கிடைக்காது.
சில வேளைகளில், வர்த்தக ரீதியாகக் கிடைக்கும் புரோகிராம்களைக் காட்டிலும் ஓப்பன் சோர்ஸ் முறையில் கிடைக்கும் புரோகிராம்கள் சிறப்பானவை என்று கருதப்படுகின்றன. எடுத்துக் காட்டாக மொஸில்லாவின் (www.mozilla.org) பயர்பாக்ஸ் பிரவுசர், இமெயில் கிளையண்ட் புரோகிராமான தண்டர்பேர்ட் மற்றும் தி குரூப் இமேஜ் எடிட்டர் (www.gimp.com) போன்றவற்றைக் கூறலாம்.
லினக்ஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் நமக்கு பல கூடுதல் பயன்கள் உண்டு. விண்டோஸ் போல இதனை ஹார்ட் டிஸ்க்கில் பதியவைத்துத்தான் இயக்க வேண்டும் என்பதில்லை. லினக்ஸ் சிஸ்டம் பதியப்பட்டு கிடைக்கும் சிடி ஒன்றை வாங்கி, சிடி ட்ரைவில் இருந்தவாறே இயக்கி, லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்தலாம். ஹார்ட் டிஸ்க்கில் பதிவதாக இருந்தாலும், விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டா உள்ள ஹார்ட் டிஸ்க்கில், லினக்ஸை தனி டைரக்டரி யில் பதிந்து இயக்கலாம்.
ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள் முழுமையாக இலவசம் என்றும் கூற முடியாது. சில வகை சிஸ்டங்களுக்கு நாம் கட்டணம் செலுத்தியாக வேண்டும். சிலவகை உதவிகள் உடனடியாகத் தேவைப்பட்டாலும் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் அப்படி ஒரு கட்டாய நிலைக்கு, யாரும் தள்ளப்பட்டதில்லை. ஏனென்றால் இந்த புரோகிராம்களைப் பயன்படுத்துவோருக்கென தனி அமைப்புகள் இணையத்தில் உள்ளன. இவற்றில் நம் சந்தேகங்களைக் கேட்டால் பதிலளிக்கப் பலர் உள்ளனர். மேலும் நமக்கு ஏற்பட்டது போன்ற பிரச்னைகள் ஏற்கனவே ஒருவருக்கு ஏற்பட்டு இந்த அமைப்புகளில் பதியப்பட்டிருந்தால், அவற்றைப் படித்து அறிந்து கொள்ள வாய்ப்புகள் தரப்பட்டிருக்கும். இது போன்ற கற்றுக் கொள்ளும் வசதிகள், ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்களில் ஏராளமாகக் கிடைக்கின்றன.
வர்த்தக ரீதியான புரோகிராம்களுக்கு இணையாக ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள் செயல்பட்டாலும், அவற்றிற்கு மாற்றாக அனைத்து புரோகிராம்களும் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை. இருப்பினும் ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்களும், பயர்பாக்ஸ், தண்டர்பேர்ட், லினக்ஸ் சிஸ்டம் போன்றவைகளும், இன்றைய தகவல் தொழில் நுட்பத்தில் தங்களுக்கென இடம் பிடித்துள்ளதை மறுக்க முடியாது.