Home » » அனோனிகள் என்றால் யார்?- Anonymous
தற்போதைய இணைய உலகில் எந்த செய்தித்தளத்திற்கு சென்றாலும் இந்த அனோனிகள் பற்றிய தகவல் தான் முக்கிய இடத்தினை பிடித்துவைத்திருக்கின்றது. அதைவிட டிவிட்டரில் அதிகம் சிலாகிக்கப்படும் ஓர் விடையமாகவும் இது மாறியிருக்கின்றது. இணையத்தில் மட்டுமல்ல தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் மற்றும் வானொலி போன்ற பல்வேறுபட்ட ஊடகங்களும் முந்தியடித்துக்கொண்டு இவர்களினை பற்றி செய்தி வெளியிடுகின்றார்கள். யார் இந்த அனோன்கள்? இவர்கள் எங்கே இருக்கின்றார்கள்? இவர்களினை பற்றிய ஓர் பதிவுதான் இது. அனோனிகளினை பற்றி அறிய ஆர்வமாக இருப்பவர்களுக்கு இது ஓர் நல்ல தீனியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இந்த “Anonymous” என்பதற்கு விக்கிபீடியா பின்வருமாறு விளக்கமளிக்கின்றது. இந்த அனோன்கள் என்பது இணையத்தில் பரவிவரும் ஓர் கொந்தர் குழுமம் ஆகும். இந்த அனோன் என்கின்ற வார்த்தை 2003 காலப்பகுதியில் 4Chan என்கின்ற புகைப்படகலந்துரையாடல் தளத்திலிருந்து உருவானதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த அனோன்கள் 2008 காலப்பகுதி மட்டும் ஓர் பொழுபோக்கு அம்சமாகவே பார்க்கப்பட்டு வந்தது. யாரும் இந்த குழுமத்தினையோ அல்ல அந்த பெயரினை பயன்படுத்தி பின்னுாட்டம் இடுபவர்களையோ கணக்கில் எடுத்தாக தெரியவில்லை. காரணம் அவர்கள் குறித்த ஓர் இலக்கினை நோக்கி இயங்காமையே. ஆனால், 2008ல் இருந்து அவர்கள் போராட்டங்கள் மற்றும் பல பெரிய தளங்களின் மீது தாக்குதல்களினை நடத்தவே விழித்துக்கொண்டது உலகம். இணைய சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றினை வற்புறுத்தி பல்வேறுபட்ட தளங்களில் குழுவாகவும் தனியாகவும் பலர் தாக்குதல் நடத்தினர். ஆனால் தாக்குதல் நடத்திய அனைவரும் அனோனின் பெயரின் கீழே தாக்குதலினை தொடுத்தனர். தங்கள் சொந்த பெயரினில் தாக்குதல் தொடுப்பதையிடுத்து இவ்வாறு பொதுவான ஓர் பெயரில் தாங்கள் ஆமோதிக்கின்ற ஓர் விடையத்தினை ஆதரித்து பலரும் தங்கள் பங்களிப்புக்களை செய்யத்தொடங்கினர்.


இவர்களுடைய இந்த அனோன் குழுமத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பல்வேறுபட்ட இணையத்தளங்கள் மற்றும் செய்தித்தளங்கள், கலந்துரையாடல் குழுமங்கள் தங்கள் தளங்களில் இந்த அனோன் குழுமத்தின் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளினை வெளியிடத்தொடங்கின. குறிப்பாக 4Chan, Futuba போன்ற புகைப்படகலந்துரையாடல் தளங்களும் அத்துடன் அவர்களுடன் இணைந்த தளங்களான wikis, Encyclopdia Dramatica போன்ற தளங்களுடன் உலகின் பல்வேறுபட்ட கலந்துரையாடல் தளங்களும் இந்த அனோன் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டன. இவை அனைத்தும் நடந்தேறியது 2008ல் ஆகும்.


இவை இவ்வாறிருக்கு காலம் செல்ல செல்ல இந்த அனோன்கள் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது. இக்குழுமத்தின் பெயரில் பல்வேறுபட்ட தாக்குதல்கள் இணையம் எங்கும் பரவிக்கிடந்தது. அனோன்கள் குழுவாக இணைந்து செயற்படுவதற்கு ஓர் முக்கிய இடமாக இருந்தது Internet Relay Chat rooms இந்த அரட்டை அறைகளின் மூலமாக தங்கள் கணனிகளையும் Ddos Attack வலைப்பின்னலில் இணைத்து பலரும் பல்வேறுபட்ட பெரிய தளங்களின் தாக்குதல்களுக்கு வலுச்சேர்த்தனர். விக்கிலீக்ஸிற்கு வலுச்சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியவர்களில் இந்த அனோனிகள் மூன்றாம் இடத்திலிருப்பதாக 2008 ஓர் பரபரப்பு செய்தியினையும் வெளியிட்டிருந்தது CNN.


சரி. இவ்வாறு உலகினையே தங்கள் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துக்கொண்டிருந்த இந்த அனோன்கள் குழுமத்தின் கட்டமைப்பு எவ்வாறு என்று பார்த்துவிடலாம். குறிப்பாக சொல்லப்போனால் இங்கு தலைவன் என்று யாரும் இல்லை. யார் வேண்டுமானாலும் அங்கத்தவராகலாம். உதாரணமாக ஓர் தனிநபர் IRC அரட்டையினில் தான் FBIயின் தளத்தினை தாக்கவிருப்பதாக கூறி ஓர் அறிக்கையினை வெளியிடும் பட்சத்தில் அந்த அறிக்கை சரி என்று நினைப்பவர்கள் குறித்த நபருடன் இணைந்து அந்த தளத்தினுாடக தங்களினை தொடர்புபடுத்திக்கொண்டு தாக்குதலை தொடுக்கலாம். இவ்வாறு தான் ஆரம்பித்தன அனேக தாக்குதல்கள். ஆனால் தற்போது அனோன்கள் தங்களுக்கு என்று ஓர் இணையத்தளத்தினையும் அத்துடன் தங்கள் தாக்குதல்கள் மற்றும் அறிக்கைகளினை வெளியிடுவதற்கு என்று தனியாக ஓர் தளத்தினையும் கொண்டிருக்கின்றார்கள். டிவிட்டரிலும் நீங்கள் இவர்களினை தேடிப்பார்கலாம்.

We are Anonymous. We are Legion. We do not forgive. We do not forget. Expect us.

முகப்புத்தகம் தொடக்கம் யுடியுப் வரை அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இவர்களின் ஆதிக்கம் இருக்கின்றது. முகப்புத்தகத்தில் இவர்களுடைய பக்கத்தில் குறித்த அளவிற்கு மேல் வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையினை சமாளிக்க முடியாமல் முகப்புத்தகம் திணறிப்போய் நிற்கின்றது. இது வரைக்கும் இந்த அனோகள் பல்வேறுபட்ட பெரும் நிறுவனங்களினுடைய வலையமைப்புக்கள் மற்றும் இணையத்தளங்களினை சேதப்படுத்தியிருக்கின்றார்கள். பல கோடி நட்டத்தினை ஏற்படுத்தியிருக்கின்றார்கள் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள். பல வியாபார வர்த்தக நிறவனங்களுக்கு இவர்கள் வில்லன்களாக இருந்தாலும் பலருக்கு இவர்கள் நாயகர்கள் தான்.


அனோனிகள் இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கின்றார்கள். குறிப்பாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் இவர்களினுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றன. Anonymous Srilanka பற்றி நான் இங்கு கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த குழுவினர் தான் இலங்கையில் போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் அதிகமான இலங்கை அரசுக்கு சொந்தமான இணையத்தளங்களினை தாக்கியளித்திருந்தார்கள். தாக்கியளித்தது மட்டுமன்றி தளத்தினுடைய பல முக்கிய தகவல்களினையும் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இலங்கை அரசின் கடற்படை,காலாட்படைகளின் தளங்கள் உட்பட பல முக்கிய தளங்கள் தாக்குதலுக்குள்ளாகி இருக்கின்றன. அதுமட்டுமல்லாது இலங்கையின் இணையத்தள மற்றும் தொலைபேசி சேவைகளை வழங்கும் டயலொக்,மொபிரெல்,சன்ரெல், சீ லங்கா ரெலிகொம் ஆகியவற்றின் சர்வர்கள் மேலும் இவர்கள் தாக்குதலினை தொடுத்திருக்கின்றனர். அதற்கான ஆதாரங்கள் இங்கே உங்கள் பார்வைக்குஊடகங்களினுடைய பார்வை இந்த அனோனிகள் மேல் எவ்வாறிருக்கின்றது? கடந்த 26 ஜீலை மாதம் 2007 ஆண்டு KTTV FOX 11 NEWS தொலைக்காட்சி இந்த அனோனிகள் பற்றிய ஓர் ஆவண தொகுப்பினை ஒளிபரப்பியது. அதிலே முன்னர் பிரபலமாக இருந்த MYSPACE சமுக வலைத்தளத்தினில் ஓர் பயனருடைய கணக்கு ஏழு தடைவகளுக்கு மேல் தாக்குதலுக்கு உள்ளானது மட்டுமல்லாது அவருடைய கணக்கிலே அருவருக்கதக்க மாதிரியான ஆண் ஓரினச்சேர்கையாளர்களின் படங்கள் பதிவேற்றப்பட்டிருந்தன. அது மட்டுமல்லாது அவருடைய கணக்கிலிருந்து அவருக்கும் அவருடைய நண்பர்கள் தொண்ணுாறு பேருக்கும் ஓர் வைரஸ் நிரலி அனுப்பபட்டதாகவும் அதில் அவருடைய இரண்டு நண்பர்களின் கணனிகள் சேதமாக்கப்பட்டதாகவும் அந்த பாதிக்கப்பட்ட பயனர் குறித்த தொலைக்காட்சி சேவைக்கு தெரிவித்திருக்கின்றார். இந்த தாக்குதலுக்கு மூலகாரணம் இந்த அனோனிகள் குழுவே என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதே போன்று உலகின் பல்வேறுபட்ட தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் இந்த அனோனிகள் பற்றிய செய்தியினை வெளியிட்டிருந்தார்கள். அதிலே அல்ஜசீரா போன்றவை இந்த அனோனிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டமை கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். குறிப்பாக அனோனிகள் இதுவரை நடத்திய தாக்குதல்களுக்கு பல்வேறுபட்ட பெயர்களினை இட்டிருந்தார்கள். இவர்களை திரும்பிப்பார்க்க வைத்தது இவர்கள் வெளியிட்ட ஓர் அறிக்கை. ஆம். நவெம்பர் மாதம் ஐந்தாம் திகதி முகப்புத்தகத்தினை முற்றுமுழுதாக தாங்கள் இணையத்தில் இருந்து அழித்தொழிக்கப்போகின்றோம் என்று ஓர் அறிக்கையினை வெளியிட்டிருந்தார்கள். இதனால் தான் பலரும் ஐயோ எமது முகப்புத்தக கணக்கும் இல்லாமல் போய்விடுமே என்று இந்த அனோனிகளின் நகர்வினை உற்று நோக்கத்தொடங்க அவர்கள் இதனை சாதகாமாக பயன்படுத்திக்கொண்டு Occupy wallstreet என்ற தாக்குதலினை நடத்தப்போவதாக அறிவித்தார்கள். அதுவும் வெற்றியளிக்கவில்லை. அதனை தொடர்ந்து சில நாடுகளின் அரசுகள் மேல் தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்தார்கள் அதுவும் பலனளிக்காத நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக தாம் தாக்குதல் நடாத்தபோவதாக கூறினார்கள். இதனை பார்த்துக்கொண்டிருந்த முஸ்லிம் சமுதாயம் சரியான ஓர் அடியினை கொடுத்திருந்தது இந்த அனோனிகளுக்கு. ஆம். அனோனிகளினுடைய தளம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் கூட தாண்டியிருக்காது. அனோனிகளின் தளத்தின் மேல் தாக்குதல் நடத்தியவர்கள் கூறியதாவது, அனோனிகள் எங்கு வேண்டும் என்றாலும் தாக்குதல் நடத்தட்டும். ஆனால் எங்கள் மதத்தின் பெயிரினாலோ அல்லது மதத்தின் மீதோ தாக்குதல் நடத்த முயன்றால் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டப்படும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். இவ்வாறு அனோனிகள் தங்கள் பல்வேறுபட்ட தாக்குதல் அறிவித்தல்களை மேற்கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் குறித்த நாளில் குறித்த தாக்குதல் நடத்தப்படாமல் போவது தான் பலருக்கு ஏமாற்றமளிக்கின்றது. கடைசியாக அவர்கள் வெளியிட்டிருக்கும் தாக்குதல் அறிவித்தலானது Torontoவுக்கு எதிரானதாகும். ஆம். ரொறன்ரோவினை அவர்கள் இணையத்திலிருந்து நீக்கப்போவதாக கூறியிருக்கின்றார்கள். பார்க்கலாம். இந்த வெடியாவது வெடிக்கின்றதா? அல்லது இதுவும் புஸ்வாணம் தானா. நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இவ்வாறு பலருக்கும் பல நாடுகளுக்கும் தண்ணி காட்டிய இந்த அனோனிகள் குழுத்திற்கு அப்பப்போ சில அடிகளும் விழுந்திருக்கின்றன. ஆம். இந்த அனோனியின் பெயரில் தாக்குதல் நடத்திய பலர் பல நாடுகளில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள். குறிப்பாக, டச்சு தேசத்து பொலிசார் டிசம்பர் மாதம் 2010ம் ஆண்டு ஓர் 16 வயது மதிக்கத்தக்க சிறுவனை கைதுசெய்தார்கள். பேய்பல்,வீசா போன்றவற்றின் மீது Ddos தாக்குதல் நடத்தியமைக்காக அவன் கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இத்தாக்குதானது விக்கிலீக்ஸிற்கு வரும் நிதியினை பேய்பல் மற்றும் வீசா நிறுவனத்தினர் ஏற்க மறுத்த காரணத்தினால் விக்கலீக்ஸிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அனோனி தரப்பிலிருந்து கருத்துவெளியிடப்பட்டுள்ளது. இதேபோன்று இந்த வருடம் ஜனவரி மாதம் அமெரிக்க FBIஇனால் 40க்கும் அதிகமான பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டன இந்த அனோனி குழும அங்கத்தவர்கள் மீது. ஆனால் உண்மை என்னவென்றால் அமெரிக்க அரசு பிடியாணை எதனையும் பிறப்பிக்கவில்லை. மாறாக ஓர் அறிக்கையினையே வெளியிட்டிருந்தார்கள் அதாவது இந்த அனோனி குழுமத்துடன் சேர்ந்து Ddos Attackல் ,ஈடுபடுவோருக்கு எதிராக வழக்குத்தால் செய்து 10 வருடத்திற்கும் அதிகமான சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதே போன்று பிருத்தானியாவில் ஐந்து சிறுவர்களும் ஓர் வாலிபரும் கைதுசெய்யப்பட்டார்கள் இதே ஜனவரி மாதத்தில். இவர்களும் அனோனிகளின் பெயரின் Ddos Attack செய்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டவர்களாவர். இவர்கள் அனைவரும் 15 தொடக்கம் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜீன் மற்றும் ஜீலைமாதங்களில் அவுஸ்ரேலியா ஸ்பெயின் மற்றும் ரேக்கிஸில் பலர் இந்த அனோனிகள் பெயரில் வங்கிகள் மற்றும் இதர வர்த்தக நிறுவனங்களின் இணையத்தளங்களின் மீது தாக்குதல் நடத்தியமைக்காக கைதுசெய்யப்பட்டார்கள். எது எவ்வாறு இருப்பினும் இந்த அனோனிகள் தங்கள் தாக்குதலினை தொடர்ந்து நடத்திய வண்ணமே தான் இருப்பார்கள். இவர்களது தாக்குதலினால் சமுகத்திற்கு ஏதாவது நன்மை ஏற்படும் என்றால் நாமும் அதனை வரவேற்க தயாராக இருக்கின்றோம்.


(This Article not a property of Tamil Computer College!
Copyright to Tamilhacking)