குறைந்த இடைவெளிக் காலத்தில், பிரவுசரைப் புதுப்பித்து வெளியிடும் திட்டத்தின் கீழ் செப்டம்பர் இறுதி வாரத்தில், மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரின் ஏழாவது பதிப்பினை வெளியிட்டது. விண்டோஸ் இயக்கத்திற்கு மட்டுமின்றி, மேக், லினக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் இயக்கத்திற்கான பதிப்புகளும் இணைந்தே வெளியிடப் பட்டுள்ளன.


இந்த பிரவுசருக்கு நாம் நிச்சயம் மொஸில்லாவைப் பாராட்ட வேண்டும். குறைவான மெமரி பயன்பாடு, மிக வேகமான இயக்கம், திரையில் சிறிது இடமே எடுத்துக் கொள்ளுதல், கூடுதலாக பல சிறப்பு வசதிகள் என நாம் விரும்பும் பல வசதிகள் சேர்க்கப் பட்டுள்ளன. பயர்பாக்ஸ் 7 இன்ஸ்டால் செய்வது வேகமாக நடைபெறுவது மட்டுமின்றி, நம்மை ஆர்வத்துடன் கவனிக்க வைக்கிறது. இதனை உங்கள் மாறா நிலை (default) பிரவுசராக ஏற்றுக் கொண்டால், இதற்கான விண்டோஸ் இயக்க ஐகான் ஒன்று திரையில் பதிக்கப்படுகிறது.
புதிய பதிப்பின் முதல் சிறப்பு அம்சம், கம்ப்யூட்டரின் மெமரியை அது பயன் படுத்தும் விதமே. MemShrink என்ற பெயரில் மொஸில்லா மேற்கொண்டு வந்த திட்டம் இதில் இணைக்கப்பட்டு புதிய பதிப்பு 7 உருவாக்கப்பட்டுள்ளது. மெமரி பயன்பாட்டினைப் பொறுத்த வரை, பல விஷயங்களில் 20% முதல் 30% மெமரி குறைவாகவே பயன்படுத்தப் படுகிறது. சில அப்ளிகேஷன்களில் இது 50% குறைக்கப்பட்டுள்ளது.
பயர்பாக்ஸ் பதிப்பு 7 ஐ இன்ஸ்டால் செய்திடுகையில், Telemetry என்ற புதியதொரு வசதியைத் தேர்ந்தெடுக்கும் படி உங்களுக்கு நினைவூட்டப்படும். இந்த புதிய சாப்ட்வேர் வசதி மூலம், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் ஒருவரின் எந்த வகை டேட்டா, எதற்காக பிரவுசரால் எடுக்கப்படுகிறது என்பது தெரியவரும். மெமரி பயன்பாடு, சிபியு செயல் சுழற்சி, சுழற்சிக்கான நேரம் மற்றும் தொடங்கு வதற்கு பிரவுசர் எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றை டெலிமெட்ரி கண்காணித்து பயனாளருக்கு வழங்கும்.
இதன் செயல்பாட்டினை அறிந்து கொள்ள வேண்டும் எனில் about:telemetry என்ற ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்து தெரிந்து கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் Telemetry வசதியை நீக்கவும் செய்திட ஆப்ஷன் தரப்பட்டுள்ளது.
மெனு பார் அனைத்தும் ஆரஞ்ச் வண்ணத்திலான பட்டன் ஒன்றில் குறுக்கப்பட்டுள்ளது. மெனு ஆப்ஷன்ஸ் அனைத்தும் இரண்டு வரிசைகளாகத் தரப்படுகின்றன. அனைத்து துணை மெனுக்களும் மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. இதனால், புக்மார்க், ஆட் ஆன் போன்ற அடிக்கடி நாம் திறக்கும் மெனுக்களை எளிதாக இடம் அறிந்து திறந்து பயன்படுத்த முடிகிறது. புக்மார்க் துணை மெனுவில் Get Bookmark Addons என்ற புதிய பிரிவு தரப்பட்டுள்ளது. ஹிஸ்டரி துணை மெனுவில், Recently Closed Tabs and Recently Closed Windows ஆகியவை இணைக்கப் பட்டுள்ளன. ஸ்டாப் மற்றும் ரெப்ரெஷ் பட்டன்கள் (stop and refresh) லொகேஷன் பாரின் வலது புறமாக, புக்மார்க் ஸ்டார் அருகே அமைக்கப் பட்டுள்ளது. நீங்கள் இணைய முகவரி (URL) ஒன்றை டைப் செய்கையில், Go பட்டன் பச்சை நிறத்தில் உள்ளது. யு.ஆர்.எல். பெற முயற்சிக்கையில், இது எக்ஸ் என்னும் ஸ்டாப் பட்டனாக சிகப்பாக மாறுகிறது.
லொகேஷன் பாருக்கு வலது புறமாக, வழக்கமான தேடல் கட்டம் உள்ளது. ஓர அம்புக்குறியினைக் கிளிக் செய்தால், சர்ச் இஞ்சின்கள் பட்டியல் காட்டப்படுகிறது.
மிகச் சிறந்த புதிய அம்சமாக இதன் Sync வசதியைக் கூறலாம். ஏற்கனவே, இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட போது, பலர் இதனைப் பயன்படுத்தத் தயங்கினர். அந்த அளவிற்கு ஏதேனும் ஒரு குறை இருந்து வந்தது. இப்போது அனைத்தும் மிக எளிதாக மேற்கொள்ளப் படுகின்றன. நம் புக்மார்க்,பாஸ்வேர்ட், முன்னுரிமை தள செயல்பாடுகள், ஹிஸ்டரி, டேப்ஸ் என அனைத்தும் இணைந்து செயல் படுகின்றன. மற்ற கம்ப்யூட்டர்களில் பயன்படுத்து கையிலும் இந்த இணைவமைதி கிடைக்கிறது. இதனை இயக்க, மெனு பாரில், இடதுபுறப் பிரிவில் உள்ள Set Up Sync என்பதில் கிளிக் செய்தால் போதும். ஏற்கனவே உள்ள Sync அக்கவுண்ட் இணைக்கப்படும்; அல்லது புதியதாக ஒன்றை நாம் தொடங்க முடியும்.
இன்னொரு குறிப்பிடத்தக்க அறிமுகம் App Tabs. டேப்பின் அகலம் இதன் மூலம் வெகுவாகக் குறைக்கப் பட்டுள்ளது. இடது பக்கம் நிரந்தரமாக இவை அமைக்கப்படுகின்றன. இதனால், இணைய முகவரி டைப் செய்திடுகையில், சார்ந்த டேப் ஒளி அதிகரித்து, திறக்கப்படுகிறது. மேலும் இந்த தளம் அப்டேட் செய்யப் பட்டிருந்தால், அது கூடுதல் ஒளியுடன் காட்டப்படுகிறது.
இதுவரை கீழாகக் காட்டப்பட்ட ஸ்டேட்டஸ் பார் மறைக்கப்பட்டுள்ளது. இப்படியே தரப்பட்டுள்ள பல இன்டர் பேஸ் மாற்றங்கள், இந்த தொகுப்பைப் புதுமையாக்கிக் காட்டுகின்றன. சில புதிய வசதிகளை இங்கே பட்டியலிட்டுக் காட்டலாம்.
இணைய தள முகவரியில் “http://” என்ற முன்னொட்டு இப்போது மாறா நிலையில் இந்த பிரவுசரில் தரப்படுகிறது.
எச்.டி.எம்.எல்.5 சப்போர்ட் செய்யப் படுவதன் மூலம், கம்ப்யூட்டரின் கிராபிக்ஸ் கார்டின் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஓப்பன் டைப் எழுத்துரு வகைகள் நன்றாகக் கையாளப்படுகின்றன. அடுத்து வர இருக்கும் இணைய தர வரைமுறை இப்போதே இந்த பிரவுசரில் கிடைக்கிறது.
ஒரே தளத்திற்கான டேப் இருமுறை திறக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
பிரைவேட் பிரவுசிங் புதிய மாற்றங்களுடன் கூடுதல் வேகத்துடன் இயங்குகிறது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Do Not Track வசதியின் மூலம் விளம்பரங்கள், நம் இணைய செயல்பாட்டில் தலை யிடுவது தடுக்கப்படுகிறது.
நமக்குப் பாதுகாப்பு தர, இரண்டு புதிய வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவை Content Security Policy மற்றும் HTTP Strict Transport Security. இவற்றின் மூலம் நாம் பார்க்கும் தள சர்வர்கள் நம் லாக் ஆன் தகவல்களைப் பெறுவது தடுக்கப் படுகிறது. வேகம், குறைவான மெமரி பயன்பாடு, புதிய பாதுகாப்பு அம்சங்கள், தளங்களை இயக்க புதிய எளிய வசதிகள் ஆகியவற்றிற்காக இந்த பதிப்பிற்கு நாம் மாறிக் கொள்ளலாம்.
பயர்பாக்ஸ் பதிப்பு 7 ஐ மொஸில்லா வின் இணைய தளத்திலிருந்து (http://www.mozilla.com/) தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடலாம். பயர்பாக்ஸ் பதிப்பு 4,5 மற்றும் 6 பயன் படுத்துபவர்களுக்கு, தானாக அப்டெட் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷனை பயன்படுத்துபவர்தான் இயக்க வேண்டும்.