Home » » டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம் - HDR நுட்பத்தின் அறிமுகம்.


இணையத்திலும் சரி பல புத்தகங்களிலும் சரி, சில புகைப்படங்கள் நமது கவனத்தை ரொம்பவே ஈர்க்கும்.
சாதாரணமாய் நாம் எடுக்கும் புகைப்படங்களிலிருந்து இவையின் தரம் ரொம்பவே அதிகமாய் இருப்பது ஒரு காரணம்.

ஒரு கவித்துவமான காட்சி அமைப்பும், ஒவ்வொரு 'பிக்ஸலின்' ஜொலிப்பும் இந்த படங்களின் ப்ரத்யேகதைகள்.

உதாரணத்துக்கு, இணையத்திலிருந்து சில படங்களைப் பாருங்கள். பிறகு விஷயத்துக்கு வருகிறேன்.




என்னங்க படம் வித்யாசமா இருக்குல்ல? ஜிவ்வ்வ்வுனு இழுக்குதுல்ல?

சாதாரணமா ஒரு படத்த எடுக்கும்போது, அந்த காட்சியில் இருக்கும் வெளிச்சத்தின் தன்மை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அளவில் இருக்கும். உதாரணத்துக்கு, ஒரு மலையும், அதன் பின்னணியில் இருக்கும் வானத்தையும் சேத்து படம் பிடிக்கணும்னு முயற்சி பண்ணீங்கன்னா, வானம் ரொம்ப பளிச்னு இருக்கும், மலை இருட்டா இருக்கும். இது ரெண்டுத்தையும், அதன் தன்மை பிசகாமல் படத்தில் கொண்டு வருவது ரொம்ப கடினம்.

வானம் எடுக்க exposure கம்மியா வைக்கணும், சற்றே இருண்ட மலையை எடுக்க அதிக exposure வைக்கணும். குத்து மதிப்பா வெச்சு எடுத்தீங்கன்னா, ரெண்டுல ஒண்ணு, கொஞ்சம் அழுத்தம் கம்மியா தான் படத்தில் பதியும்.

என்ன மாதிரி கத்துக் குட்டிகளுக்கு, இது ஒரு பெரிய விஷயம் இல்ல. வந்த வரைக்கும் போதும்னு க்ளிக்கிட்டு வந்துருவோம்.
ஆனா, இதே தொழிலா செய்றவங்களும், அதீக ஆர்வம் உள்ளவங்களும், ஒரு படி மேல போய் முயற்சி பண்ணுவாங்க.
இவங்க, வானத்தை தனியா ஒரு படம் பிடிப்பாங்க, அதுக்கு தேவையான exposure வச்சு. அடுத்து, மலைய தனியா அதுக்கு தேவையான exposure வச்சு படம் புடிப்பாங்க.
அப்பரம் ரெண்டையும் ஒட்டி ஒரு படம் ஆக்குவாங்க. exposure-blending எனப்படும், இந்த யுக்தி அருமையான படங்களைத் தரும்.

இதே வரிசையில், டிஜிட்டல் உலகில் உபயோகப்படுத்தும் இன்னொரு யுக்திக்கு HDR என்று பெயர். High Dynamic Range என்பதன் சுருக்கமே HDR. மேலே நான் கொடுத்துள்ள படங்கள் HDR நுட்பம் உபயோகித்து 'செய்யப்பட்டவை'யே.

HDR நுட்பம், 1997 வருடத்திலிருந்து இருந்தாலும், டிஜிட்டல் ப்ரபலம் அடைந்த பின்னர், இதன் உபயோகம் அதிகரித்துள்ளதாம்.

ஒரு காட்சியை, பல விதமான exposureல் எடுத்துவிட்டு, எல்லா படத்தையும் சேர்த்து கலந்து, 'நச்'னு ஒரு படம் உருவாக்கும் முறையே HDR.

கார் ஓட்டக் கத்துக்கும் போது, காரோட engine எப்படி வேலை செய்துன்னெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல. எத எங்க மெதிச்சு, எப்படி சுத்தினா வண்டி நகுரும்னு தெரிஞ்ஜா போதும். அதே போல், HDRன் technical விளக்கங்கள் எல்லாம் பார்ப்பதைவிட, அது எப்படி practicalஆ உபயோகிப்பது என்பதை தொபுக்கடீர் என்று குதித்துப் பார்ப்போம் (technical விளக்கங்கள் எல்லாம் எனக்கும் ரொம்ப தெரியாது, என்பதை நாசூக்கா சொன்னா புரிஞ்சுக்கங்கப்பா :) )

சரி, இனி HDR உபயோகித்து, 'ஜிவ்வ்வ்வ்வுனு' இழுக்கும் படங்கள் எடுப்பது எப்படீன்னு பாக்கலாம்.

இதுக்கு கைவசம் என்னென்ன தேவை?
1) DSLR camera (மற்ற டிஜிட்டல் கேமராவில் AEB வசதி இருந்தால் அதையும் உபயோகிக்கலாம்).
2) Tripod - முக்காலி
3) PhotoMatix மாதிரி ஒரு மென்பொறுள்

இனி எப்படி படம் எடுப்பதுன்னு பாப்போம்.
எடுக்க நினைக்கும் காட்சிக்கு ஏற்றார் போல் முக்காலியை வைத்து, அதற்கு மேல் கேமராவை வைக்கவும்.
கேமராவில், AEB modeஐ தேர்ந்தெடுத்து, exposure -2, 0, +2 என்று வைத்துக் கொள்ளவும். (Program modeல், menu வுக்கு போனால், AEB தென்படும்).
இப்படி பண்ணா என்னாகும்னா, ஒரு காட்சிய முதல் முறை க்ளிக்கும்போது, அந்த காட்சிக்கு கம்மியான exposure கொடுத்து பிடித்துக் கொள்ளும். அடுத்த முறை க்ளிக்கும் போது, 'சாதாரண' exposureல் பிடித்துக் கொள்ளும். அதற்க்கு அடுத்த முறை, ஜாஸ்தியான exposure வைத்து எடுத்துக் கொள்ளும்.

வெச்சாச்சா? இன்னும் என்ன தாமதம்? இனி, உங்க காட்சிய, மூணு தடவ படம் புடிங்க.
முதல் படம் இருட்டாவும், ரெண்டாவது சுமாராவும், மூணாவது வெளிச்சமாவும் வரும். இந்த மாதிரி.


இதுவரை புரிஞ்சுதா?
கம்மியான exposureல் எடுக்கும்போது, படத்தில் அதீக வெளிச்சமான 'பல்பு' வெளிச்சம், நல்ல படியா படத்தில் பதியும்;
அதே மாதிரி, ஸோஃபாவின் பின் புறம், இருண்டிருப்பதால், அதீக exposure வைத்து எடுக்கும்போது, ஸோஃபாவின் முழு விவரமும் படத்தில் பதியும்.

சரி, இப்ப மூணு படத்த வச்சுக்கிட்டு என்ன பண்றது?
அதுக்குத் தான் PhotoMatix செஞ்சு வச்சிருக்காங்க.

PhotoMatixஐ தொறங்க.
Menuல் 'HDR - Generate' க்ளிக்கி, உங்கள் மூன்று படங்களையும் தெரிவு செய்து, OK கொடுங்கள்.
கொடுத்தாச்சா?
PhotoMatix இந்த மூணு படத்தையும், ஆராஞ்சு, ஒவ்வொரு பிக்ஸலிலும் (pixel) 'சிறந்த' pixelஐ தேர்ந்தெடுத்து, எல்லா விவரங்களும் பளிச்சென தெரியும் விதத்தில், ஒரு படத்தை உருவாக்கித் தரும்.
இப்படி வரும் படத்தை, PhotoMatixல் உள்ள Tone-Mapping என்ற option உபயோகித்து, மேலும் மெருகேற்றி, ஒரு நல்ல படத்தை உருவாக்கலாம்.

மேலே உள்ள மூணு படமும், கலந்து கலக்கி, மசாலா போட்டு, Tone Mapping பண்ணா இப்படி கிடைச்சுது.


ஒரே காட்சியை மூன்று முறை எடுத்துக் கலப்பதால்,இந்த நுட்பம், அசையும் பொருளுக்கு உபயோகித்தல் கடினமானது.

மத்தபடி, ப்ரொஃபஷனலா ஒரு படத்த மாத்தணும்னா, இந்த யுக்தி கை கொடுக்கும்.

நானும் கத்துக் குட்டி, அதனால, என் படத்துல பெரிய 'பன்ச்' இருக்குதான்னு தெரியல.

ஜாம்பவான்களின், மேலும் சில படங்கள் கீழ போட்டு, நிறைவு செய்கிறேன்.
குறை நிறை சொல்லுங்க.
நீங்களும் இந்த நுட்பத்தை முயன்று, படத்தை அரங்கேற்றுங்கள்!
வாழ்க HDR!