Home » » சமூக வலைத் தளங்களின் தேர்தல் வருமானம் ரூ. 500 கோடி

நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசியல் கட்சிகள் எந்த வாய்ப்பினையும் விட்டு வைக்கவில்லை. முதல் முறையாக, டிஜிட் டல் ஊடகங்களைச் சிறந்த முறையில் அதிகபட்சம் பயன்படுத்தும் முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால், இந்த வகையில் ரூ.500 கோடி அளவில் வருமானம் கிடைக்கும் என மொத்தமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை, சமூக மற்றும் பயனுறை வலைத் தளங்களாக இயங்கும் Google, Facebook, Twitter ஆகியவை பங்கிட்டுக் கொள்ள இருக்கின்றன.



ஏறத்தாழ 81.4 கோடி வாக்காளர்கள் தேர்தலில் தங்கள் வாக்கினைப் பயன்படுத்த இருக்கின்றனர். இவர்களில் 20 கோடிக்கும் மேலானவர்கள் இணையத்தைத் தங்கள் வாழ்க்கை நடைமுறையில் ஒன்றாகக் கொண்டுள்ளனர். இதில் 10 கோடி பேர் Facebook, Twitter போன்ற சமூக வலைத் தளங்களில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இந்த தேர்தலில் முதல் முறை வாக்களிக்கும் வயதை எட்டிய இளைஞர்கள் 10 கோடி பேர் உள்ளனர். இவர்கள், இளைஞர்களாக இருப்பதால், இணையப் பயன்பாட்டில், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களை இலக்காக வைத்தே, அரசியல் கட்சிகள் முயற்சிகள் எடுத்து வருகின்றன.
தேர்தலுக்கான மொத்த விளம்பரச் செலவு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ. 400 கோடி முதல் ரூ.500 கோடி வரை  Digital ஊடகங்களில் செலவிடப்படும்.
சமூக வலைத் தளங்கள் தேர்தலில் என்ன பாதிப்பினை ஏற்படுத்தும், அதனை ஒரு கட்சி எப்படித் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதனை ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியினர் சென்ற டில்லி மாநிலத் தேர்தலில் காட்டினர். அதனைப் பார்த்த பின்னரே, மற்ற கட்சியினரும் இதில் மிகவும் ஆர்வத்துடன் இறங்கியுள்ளனர்.



அண்மையில் எடுத்த கணிப்பின்படி, 543 மக்களவைத் தொகுதிகளில், 160 தொகுதிகளின் வெற்றி வாய்ப்பினை, இத்தகைய இணைய தளங்களில் மேற்கொள்ளப்படும் பரப்புரை உறுதி செய்திடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான், எப்படியும் வெற்றி வாய்ப்பினைப் பெற வேண்டும் என்று முயற்சிக்கும் பெரிய கட்சிகள், இணைய தளங்களில் தங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மாநில அளவில் இயங்கும் சிறிய கட்சிகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. வாக்காளர்கள் மனதில், தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால், அதற்கு சமூக இணைய தளங்கள் நிச்சயம் பெரிய அளவில் உதவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு கட்சியும், வேட்பாளரும் தங்கள் எண்ணப்படியும், தங்களுக்குக் கிடைக்கும் ஆலோசனைப் படியும், தங்கள் Digital தடங்களைப் பதித்து வருகின்றனர். மொத்த செலவில், 5% முதல் 10% வரை இதற்கென செலவழிக்க ஒதுக்கி உள்ளனர்.

Youtube  தளம் இந்த வகையில் பெரும் பங்கு வகிக்கிறது. இது Audio மற்றும் Video கலந்து இருப்பதால், தங்கள் சாதனகளைக் காட்டுவதற்கும், தங்கள் கொள்கைகளைத் தெரிவிப்பதற்கும், எதிர்காலத் திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளை அறிவிப்பதற்கும், யு ட்யூப் வீடியோக்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சிலர், ஆன்லைன் வழியே, தங்களுக்கு நன்கொடைகளையும் பெறுகின்றனர். கட்சியில் சேருபவர்களிடம் உறுப்பினர் கட்டணத்தையும் Online வழியே வசூல் செய்கின்றனர். குறிப்பாக வெளிநாட்டில் வாழும் நம் நாட்டினரிடம் நன்கொடை பெறுவதில் இந்த வழிகள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. பல கட்சிகள், இதற்கெனவே Digital பிரச்சார Managers'ளை நியமனம் செய்துள்ளன.

நன்றி - தின மலர்