Home » »

இலவச போட்டோ தொகுப்பு
நம் ஆவணங்கள், செய்திக் குறிப்புகள், தகவல் அறிக்கைகளில் படங்கள் மற்றும் போட்டோக்களை இணைத்து தயாரிக்க விரும்புவோம். சரியான போட்டோக்களுக்கும் படங்களுக்கும் எங்கு செல்வது? என்ற கேள்வியோடு, இணையத்தைச் சுற்றி வந்த போது ஒரு தளம் கவனத்தைக் கவர்ந்தது. http://www.publicdomainphotos.com/ என்ற முகவரியில் உள்ள அந்த தளத்தில் 5,000 க்கும் மேற்பட்ட போட்டோக்களும், அதிகமான எண்ணிக்கையில் கிளிப் ஆர்ட் படங்களும் கிடைக்கின்றன. புகைப்படங்களைத் தேடிப் பெறுவதற்கு மிக எளிமையான வழி ஒன்று தரப்பட்டுள்ளது. இதில் போட்டோக்கள் வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் காட்டப் படுகின்றன. தேவைப்படும் போட்டோவிற்கான பிரிவில் கிளிக் செய்தால், படங்களின் முன் தோற்றக் காட்சிகள் கிடைக்கின்றன. பின் விரித்துப் பார்த்து நம் கம்ப்யூட்டருக்கு மாற்றிக் கொள்ளலாம். மிருகங்கள், கட்டடங்கள், நகரங்கள், பானங்கள், பூக்கள், உணவு, தோட்டம், பூச்சி வகைகள், உள் அலங்கார அமைப்பு, புல்வெளிகள், விளக்குகள், தாவரங்கள் என போட்டோ வகை பட்டியல்கள் நீள்கிறது. இந்த பிரிவுகளுக்குத் துணைப் பிரிவுகளும் கிடைக்கின்றன. இதனால் நம் தேடல் குறுக்கப்பட்டு நம் தேவைகளை எளிதாக நிறைவேற்றப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, landscapes என்னும் பகுதியில் fields, forests, lakes, mountains, roads, and sky என அதன் வகைகள் விரிகின்றன. ஒருமுறை சென்று பார்த்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 

Windows' Online Drive
என்னதான் ஹார்ட் டிஸ்க்கின் விலை மிகவும் குறைவாக இருந் தாலும், நாம் அதில் பதியும் பைல்களின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. சில நெருக்கடியான வேளைகளில் எந்த பைலை அழிப்பது, எந்த பைலை வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்க முடியாமல் குழப்பமடை கிறோம். இது போன்ற நேரங்களில் நமக்கு உதவிட பல ஆன்லைன் தளங்கள் உள்ளன. இங்கு சென்று நம்முடைய பைல்களை சேவ் செய்து வைக்கலாம். இப்படி பல தளங்கள் இருந்தாலும் இவற்றில் சில கட்டுப்பாடுகள் இருக்கும்.
குறிப்பிட்ட அளவிற்கு மேல் உள்ள பைல்களை அப்லோட் செய்து வைக்க முடியாது. நமக்கு ஒதுக்கப்படும் ஆன்லைன் டிரைவின் அளவு குறைவாக இருக்கும். திடீரென சில மாதங்கள் அல்லது நாட்கள் கழித்து கட்டணம் செலுத்தச் சொல்வார்கள். சில வேளைகளில் அந்த குறிப்பிட்ட சர்வரை அடைய முடியாது. சில நாட்களில் சர்வர் இல்லை என்ற செய்தியும் கிடைக்கும்.
இது போன்ற பிரச்னைகள் எதுவும் இன்றி நமக்கு இந்த வகையில் கிடைப்பதுதான் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவ் (Windows Live Sky Drive) வசதியாகும்.
இந்த ட்ரைவில் பைல்களை சேவ் செய்து வைக்க ஒவ்வொருவருக்கும் 25 ஜிபி இடம் தரப்படுகிறது. எனவே இதில் ஏறத்தாழ சராசரியான 1000 டாகுமெண்ட்களை சேவ் செய்திடலாம். 3,000 பாடல்களைப் பதிந்து வைக்கலாம். 10,000 போட்டோக்களை இதில் பாதுகாத்து வைக்கலாம். இதற்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பு உண்டு. அத்துடன் இந்த பைல்களை மற்றவர்கள் பார்ப்பதற்கும் அனுமதிக்கலாம். பிரைவேட் (Private) என வகைப்படுத்திவிட்டால் நீங்கள் மட்டுமே அதனைக் கையாள முடியும். ஷேர்டு (Shared) என ஒதுக்கினால் மற்றவர்களுடன் பைல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். அனைவரும் பார்க்கலாம் என்றால் பப்ளிக் (Public) என வகைப்படுத்த வேண்டும்.
இதனைப் பெற என்ன செய்திட வேண்டும்? http://skydrive.live.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். இதில் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கி, ஒரு மெம்பர் ஆக உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள். பின் அதில் தரப்படும் வழி நடத்தல்களின் படி சென்று பைல்களை அப்லோட் செய்திடலாம். உங்கள் பைல்கள் வைத்திடும் ட்ரைவினை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மற்ற ஹார்ட் டிஸ்க் ட்ரைவ் பிரிவுகளில் ஒன்றாக இயக்கலாம்.
இதனால் நீங்கள் ரகசியமாக வைத்துப் பார்க்க வேண்டிய பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் வைக்காமல் ஆன்லைன் ட்ரைவில் வைக்கலாம். உங்கள் அனுமதியின்றி யாரும் பார்த்துவிட முடியாது. இந்த அனைத்து வசதிகளும் இலவசம் என்பது இதன் உன்னத சிறப்பாகும். 




புதிய அச்சுறுத்தல்கள்
ஜிமெயில், ஹாட்மெயில் மற்றும் யாஹூ தளங்களில் புதிய வகை தாக்குதல்கள் இருந்ததாக இந்த தள நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இவை பெரும்பாலும் பிஷ்ஷிங் எனப்படும், வாடிக்கையாளர் கவனத்தினைத் தூண்டி விட்டு, கவிழ்த்துவிடும் செயல்முறை களாகவே இருந்து வருகின்றன. எனவே இந்த தளங்கள் மட்டுமின்றி, வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நமக்கு அறிவித்துள்ளன. வழக்கமாக, நமக்கு வரும் மின்னஞ்சல் செய்திகளில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்யாதீர்கள் போன்ற எச்சரிக்கைகள் மட்டும் இப்போது சரி வராது. மேலும் பல புதிய வழிகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மைக் காலத்திய தூண்டுதல் வழி முறைகளை ஆய்வு செய்து சில வழிகளைத் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
1. நண்பர்களை எப்போதும் நம்பாதீர்கள்: பலமுறை நாம் இந்தப் பக்கங்களில் எழுதியபடி, பிரபலமான வங்கிகளின் பெயர்களில், நம் வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்ட் கேட்டு வரும் இமெயில்கள் குறித்து நாம் கவனமாகவே இருக்கிறோம். இவை எப்போதும் போலியாகவே உள்ளன. இதனால் தான், பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் இன்டர்நெட் வழி கணக்கினைத் திறக்கும் முன்னரே, தங்கள் வங்கி எப்போதும் இது போன்ற தகவல்களைக் கேட்டதில்லை; கேட்கவும் மாட்டோம் என அறிவிக்கின்றனர். ஆனால் தற்போது நம்மை மாட்ட வைக்கும் இமெயில்கள், நம் நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் குடும்பத் தினரிடமிருந்து வருபவையாக உள்ளன. இதனால், நாம் உடனே அவை பற்றி இரண்டாம் சிந்தனை இல்லாமல், லிங்க்குகளில் கிளிக் செய்து விடுகிறோம். அவை நம்மை மாட்ட வைக்கும் தளங்களுக்கும், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்கும் வழி அமைக்கின்றன. எனவே எத்தகைய உறவு முறை உள்ளவர்களிடமிருந்து, லிங்க்குகளோடு வரும் மின்னஞ்சல் செய்திகள் குறித்து அவர்களைத் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னரே, அந்த அஞ்சலில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்திட வேண்டும்.
2.நம்மை செயல்படாமல் வைத்தல்: சென்ற மே மாத இறுதியில், ஹாட்மெயில் தளத்திற்கு வந்த மின்னஞ்சல் செய்திகளில் ஒரு புதிய வழிமுறையை ஹேக்கர்கள் பின்பற்றியதாக, ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வகையில் மின்னஞ்சல் செய்திகள் தனி நபர்களைக் கவரும் வகையில் வெளியிடப்படுகின்றன. அஞ்சல்கள் முன் தோற்றப் பார்வையில் காட்டப்பட்டு, அதன் வழியிலேயே, அக்கவுண்ட் வைத்திருப்போரைக் கவிழ்த்திடும் வழிகள் தரப்பட்டிருந்தன. இதில் உள்ள ஒரு ஸ்கிரிப்ட் தானாக இயங்கி, மெயில் அக்கவுண்ட் வைத்திருப்பவரின் தனி நபர் தகவல்களைத் திருடும் வழிகளை மேற்கொள்கின்றன. இத்தகைய தாக்குதல்கள் குறித்து தகவல்கள் வந்தவுடன், மைக்ரோசாப்ட் உடனே அதனைச் சரி செய்தது. இருப்பினும் பாதிப்பு பன்னாட்டளவில் அதிகமாகவே இருந்தது.
ஜிமெயில் மின்னஞ்சல் தளத்தில் புகுத்தப்பட்ட கெடுதல் வழி வேறு மாதிரியாக இருந்தன. இந்த கெடுதல் வழிகள், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை ஆய்வு செய்து, வைரஸ்களைக் கண்டறியும் குறிப்புகளைச் செயல் இழக்கச் செய்து, தங்கள் வேலையை முடித்துக் கொண்டன.
3.தொடரும் நாசம்: ஒரு கம்ப்யூட்டரைத் தாக்கியவுடன், தொடர்ந்து அதனையே தாக்குவதற்கான வழிகளையும் இந்த கெடுதல் வழிகள் கொண்டிருக்கின்றன. ஏனென்றால், ஒருமுறை தனி நபர் தகவல்கள் கிடைத்தவுடன் அவற்றைப் பயன்படுத்தி தொடர் அழிவு வேலைகளை மேற் கொள்வது இவற்றிற்கு எளிதாகிறது.
4. புதிய அறிவுரைகள்: வழக்கமான எச்சரிக்கைகளுடன், ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் புதிய அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. மின் அஞ்சலில் ஏதேனும் இணைய தளத்தின் முகவரிக்கான லிங்க் தென்பட்டால், அதன் சொற்களில் உள்ள எழுத்துக்களில் மாறுதலான எழுத்துக்கள் உள்ளனவா என்று கவனிக்க வேண்டும். இந்த தளங்கள் மைக்ரோசாப்ட், யாஹூ, கூகுள் மற்றும் பிரபலமான தளங்களின் பெயர் களோடு தள முகவரியைக் கொண்டிருக்கும். ஆனால் உற்று நோக்கினால், இவற்றின் பெயர்களோடு ஒன்றிரண்டு எழுத்துக்கள் இணைக்கப் பட்டு, கெடுதல் விளைவிக்கும் தளங்களுக்கான முகவரிகளாக இருக்கும்.
ஜிமெயில், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற பிரபல மெயில் தளங்கள் தொடக்கத்தில் காட்டப்பட்டு, அடுத்தடுத்த மெயில்களைக் காட்டாமல், அது சரியில்லை, இது சரியில்லை என்று பிழைச் செய்தி வருகிறதா? இணைய இணைப்பு இருக்கும்போதே, எந்த தளமும் கிடைக்க மறுக்கிறதா? உங்கள் டி.என்.எஸ். சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என்ற பிழைச் செய்தி கிடைக்கிறதா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்ட இந்த வகை கெடுதல் விளைவிக்கும் வழிகளுக்குப் பலியாகி விட்டதென்று பொருள்.
மைக்ரோசாப்ட் மற்றும் பிற ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் தரும் அப்டேட் பேட்ச் பைல்களை இயக்கி வைக்கவும். அப்படியும் சரியாகவில்லை என்றால், நல்ல நிலையில் கம்ப்யூட்டர் இயங்கிய போது ஏற்படுத்திய ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்குச் செல்லவும்.
ஆனால் இவை எல்லாம் நிரந்தரத் தீர்வாகிவிடாது. பொறுமையாக அனைத்து மின்னஞ்சல்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து, கவனமாகச் செயல் படுவதே நல்லது.