இந்தியப் பிரதமர், ஜனாதிபதி, எதிர்கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர், ஏன் கம்யூனிசத் தலைவர்களான அச்சுதானந்தன், தலாய் லாமா, இலங்கைத் தலைவர்கள் என எதோ பெரும்புள்ளியாகவே பாபாவை கணிக்கச் செய்துள்ளார்கள்.............
ஏனப்பா பாபா மீது உங்களுக்கு கோபம் என சிலர் என்னைப் பார்த்துக் கேட்கலாம்? தனிப்பட்ட கோபம் என்று அவர் மீது ஒன்றுமில்லை. ஆனால் ஒரு சத்திய சாய் பாபாவின் மரணத்தைக் காட்டும் இதே இந்திய ஊடகங்கள் நாளை எங்க வீட்டுப் பக்கத்தில் இருக்கும் குறியாடியின் மரணத்தைக் காட்டுவார்களா என்பதே எனது கேள்வி? அய்யோடா பாபா வாழும் கடவுளாச்சே அதான் இவ்வளவு தினுசாக் காட்டுறாங்க என்கின்றீர்களா?
வாழும் கடவுளா ? இல்லை காசுக் கடலா? பாபா மீது அரசியல் வாதிகள் பொழிந்து பொழிந்து இரங்கல் செய்தி தருவதெல்லாம், சும்மா உதாருக்காக ! அவர் பெரிய யோகி என்பதாலோ? இல்லை பெரும் மகான் என்பதற்காகவோ அல்ல? இந்தியா முழுதும் இந்தியாவுக்கு வெளியேயும் லட்சக்கணக்கான பாபா பக்தர்கள் இருக்கின்றார்கள் - அவர்களின் வாக்குகளையும், பணத்தையும் குறி வைத்துத் தான் என்பதை மறக்கக் கூடாது. இதே போலத் தான் தினகரன் என்னும் போலி கிருத்தவ பிரசங்கியின் மரணத்தையும் அரசியலாக்கிக் கொண்டார்கள் நமது பகுத்தறிவு பாசறைகள்.
உலகின் பிரபல செக்ஸ் மேஜிசியன் ஒன்றே தெய்வம் :
இன்று இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கோ, அல்லது வெளிநாடுகளில் வாழும் இந்துக்களுக்கோ இந்து மதம் என்றாலே என்னவென்றே தெரியாது. அதன வேதங்களில் ஒரு வரியேனும் படித்துப் பார்த்து இருப்பார்களாத் தெரியவில்லை. அப்படிப் படித்து இருந்திருந்தால் இந்த சத்ய சாய் பாபா, சங்கராச்சாரியார், நித்தியானந்தா, பிரேமானந்தா போன்றோரைக் காறித் துப்பி இருந்திருப்பார்கள். குற்றம் வேதங்களில் இல்லை ! வேதம் பிரம்மன் ஒருவனே கடவுள் எனவும், வேறு கடவுள் இல்லை எனக் கூறுகின்றது. ஆனால் அனைத்தையும் கடவுளாக்கி காசாக்கி அதிகாரமாக்கி சொகுசாக வாழவே இந்துக்களை பயன்படுத்தி வந்தது பிராமணம், பயன்படுத்தி வருகின்றது இன்றைய கார்ப்பரேட் இந்துத்வா?
கிரேட் மெஜிசியன் :
தானே கடவுள் :
ஏனைய பிரசங்கிகள், மதவாதிகள் போல் இல்லாமல் தானே கடவுள் என அறிவித்துக் கொண்டவர் பாபா. இவரை மாதிரி அம்மா பகவான், நித்தியானந்தா என ஏகப்பட்ட கடவுள்கள் நம் நாட்டில் இருந்தும் துன்பம் விலகியபாடில்லை இந்த இந்தியத் திருநாட்டில். அதான் சொல்வாங்கத் தெரியுமா? கடவுள் இருக்குனு சொல்லுகிறவனையும் நம்பலாம், கடவுள் இல்லைனு சொல்லுகிறவனையும் நம்பலாம் ஆனால் நான் தான் கடவுள் என்று சொல்லுகிறவனை நம்பக் கூடாதுனு. இந்தப் பாபா தன்னைக் கடவுளின் தூதர் என்றோ, கடவுளின் மகன் என்றோக் கூடக் கூறவில்லை, தானேக் கடவுள் எனக் கூறியவர்.
வார்த்தைத் தவறிய பாபா:
தானேக் கடவுள் எனக் கூறியவருக்கு தான் எப்போது இறப்பார் எனக் கூறத் தெரியவில்லை. சாய்பாபா தாம் 94 வயது வரையும் வாழ்வேன் எனப் பகிரங்கமாகக் கூறியவர் ஆனால் நடந்தது என்ன ? தானே கடவுள் எனவும் பலரின் பிணியை நீக்கியவர் எனப் பிரச்சாரம் செய்யப்பட்ட பாபா கடைசியில் மருத்துவர்களின் உதவியைப் பெற்றதேன் போன்ற கேள்விகளை பலர் எழுப்பிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் என்ன சொன்னால் என்ன என்று பலர் சத்ய சாய்ப் பாபாவின் மேஜிக்கை நம்பித்தான் அலைகின்றார்கள்.
கார்ப்ரேட் இந்துத்வாவின் முன்னோடி :
இந்து மதமானது வைதிக மதங்களை இணைத்து 17ம் நூற்றாண்டில் பிரமாணர்களால் இந்த நாட்டு மக்கள் மீது திணிக்கப்பட்டதை யாராலும் மறுக்க இயலாது. வேத மதமாக தோன்றிய வைதிக மதம் இயற்கை வழிப்பாட்டையும், ஒரு தெய்வ வழிப்பாட்டு முறைகளைக் கொண்டிருந்தது. ஆனால் பின்னாளில் எழுந்த ஸ்மிருதி, ஸ்ருதிகளும், பின்னர் பிரமாணர்களால் பௌத்த-சமணத்தைக் காப்பியடித்து உருவாக்கப்பட்ட வேதாந்தம், அத்வைதம், த்வைதம், மாத்வம் போன்ற தத்துவங்களால் மறைக்கப்பட்டு அதுவே வைதிக சமயமாக உருமாறியது. அதனை வெற்றிகரமாக இந்து மதமாக மாற்றி - 20-ம் நூற்றாண்டின் இறுதியில் எழுந்த சமய சீர்த்திருத்தவாதிகளான விவேகானந்தர் போன்றோரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பல கார்ப்ரேட் இந்துத்வாவாதிகள் உருவாகினார்கள். அவற்றில் முதன்மையானவர் சத்ய சாய் பாபா ஆவார்.
எங்கே வேற்று மதங்கள் இந்துமதத்தினை அழித்துவிடுமோ என்ற பயத்தில் உண்மையான மெய்யியல் கோட்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லவிடாமல், இப்படி மேஜிக் செய்பவர்களை விளம்பரப்படுத்தி காசுக்கு காசாவும் ஆச்சு, புகழுக்கு புகழாகவும் ஆச்சுனு போலி இந்துத்வா வளர்த்தெடுக்கப்பட்டது.
அவதாரம் என்றுப் புளுகியவர்:
நவம்பர் 23, 1926-யில் சத்யநாராயண ராஜுவாக ஒரு ஆதிக்கச் சாதிக் குடும்பத்தில் பிறந்தவர் இந்த பாபா. தனது 14ம் வயதில் தன்னை அவதாரமாக அறிவித்துக் கொண்டவர். அத்தோடு நிற்காமல் சீரடியில் வாழ்ந்து மடிந்த சீரடி சாய்ப் பாபாவின் மறுப்பிறப்பு என்று சொல்லிக் கொண்டார். சீரடிப் பாபா இப்படியா கோடிக் கணக்கான சொத்துக்களை சேர்த்துவைத்தார் என்பது தனிக் கேள்வி ! அத்தோடு நிற்காமல் தனது 24 வயதில் பிரசாந்தி நிலையம் என்ற ஆசிரமத்தையும். 1972யில் அவரிடம் சேர்ந்த கோடிக்கணக்கான சொத்துக்களை சத்ய சாய் சென்ட்ரல் ட்ரஸ்ட் என்றப் பெயரில் உருவாக்கி ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவியவர்.
இன்று அதன் மதிப்பு 40, 000 கோடியையும் தாண்டும் எனவும், அத்தோடு இல்லாமல் 126 நாடுகளில் பல மையங்களையும் நிறுவி செயல்பட்டு வருகின்றது.
கடவுளுக்கு வந்த ஹார்ட் அட்டாக் :
சத்ய சாய் பாபா தன்னைக் கடவுள் என அறிவித்துக் கொண்டாலும், உழைப்பற்ற வாழ்க்கை முறையாலும், சொகுசான உணவுப் பழக்க வழக்கங்களாலும் - பல முறை இருதய அடைப்பு ஏற்பட்டு வைத்தியம் செய்துள்ளார். 1963-யில் அவருக்கு பலமுறை இருதய அடைப்பு ஏற்பட்டு இருந்தது. கடைசியாக மரணிக்கும் தருணத்திலும் பேஸ் மேக்கர் பொருத்தியே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
துண்டக் காணோம் துணியக் காணோம் :
சத்ய சாய் ட்ரஸ்டில் ஏற்பட்ட பணப் பிரச்சனையைத் தொடர்ந்து அதன் உறுப்பினர் பலருக்குள் பிணக்கு ஏற்பட்டது. அதனால் கோபமடைந்த சிலர் ஜூன் 6, 1993-யில் சத்ய சாய் பாபாவை கொலை செய்ய முயற்சித்தனர். இத்தாக்குதலில் சத்ய சாய் பாபாவே எதிர்ப்பாராமல் உயிர் தப்பினார். ஆனால் அவரின் வாகன ஓட்டுநர் உட்பட ஆறு பேர் அப்போது கொல்லப்பட்டனர்.
சத்ய சாய் பாபாவினை கொலை செய்ய முயற்சித்தவர்கள் சத்ய சாய் மேல்நிலைக் கல்வியகத்தில் மெரின் இஞ்சியனிரியங்க் பயின்ற சாந்தாராம் பிரபு. ஈகே சுரேஷ் குமார், கே சாய் குமார் மற்றும் என் ஜெகநாத் என்னும் மாணவர்கள் தான் என பின்பு அறியப்பட்டு கைது செய்யப்பட்டனர். ஆனால் சாய் பாபாவின் உண்மை முகம் அப்போது தான் பலருக்குத் தெரிந்திருக்கும். அந்த மாணவர்களில் ஈகே சுரேஷ் குமார், கே சாய் குமார் இருவரும் காவல்துறையின் எண்கவுண்டரில் கொல்லப்பட்டனர் என கூறப்பட்டது. ஆனால் கொல்லப்பட்ட இருவரும் இறந்துக் கிடந்தது பாபாவின் படுக்கை அறையில் தான். மற்ற இருவரும் தப்பிச் சென்று நாக்பூரில் பதுங்கி இருந்ததாகக் கூறப்பட்டு கைதாகினார்கள்.
ஆனால் இந்த நடவடிக்கைகள் மூலம் ஆந்திர அரசியலிலும், பாபா எவ்வளவு செல்வாக்கு செலுத்தி இருந்தார் என்பதை நன்கு அறியக் கூடியதாக இருந்தது. காரணம் பெரும் அரசியல் வாதிகளும், சினிமா நடிகர்களும், விளையாட்டு வீரர்களும் அவரின் காலடியில் கிடந்தார்கள். அவரின் குற்றங்களை யாரும் கவனிக்கவோ, எதிர்த்துப் பேசவோ நாதியற்றுப் போனார்கள்.
இந்த வழக்கினை தீவிரமாக விசாரிக்க வந்த பல அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றப்பட்டனர். பாபாவின் அராஜகம் தொடர்ந்தது.
பாலியல் குற்றச்சாட்டு :
அனைத்து சாமியார்கள் போலவும் சத்ய சாய் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் பல எழுந்தன. ஆனால் வழக்கம் போல பணமும், பலமும் அவற்றை மூடி மறைத்தன எனலாம். சத்ய சாய் பாபா ஒரு பீடோபைல் எனக் குற்றம் சாட்டப்பட்டது. அவரால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் வயதுக் குறைந்த இளம் ஆண்க் குழந்தைகள் தான். சத்ய சாய் பாபாவின் ஆசிரமத்தில் அவர்கள் நல்லொழுக்கம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சேர்த்துவிட்டு சென்றுவிடுவார்கள். ஏன் வெளிநாடுகளில் இருந்துக் கூட பலர் தங்கி இருந்தனர். ஆனால் அவர் இளம் ஆண் குழுந்தைகள் மீது பாலியல் உறவு மேற்கொண்டார், பிறப்புறுப்புகளைத் தொட்டார், வாய்வழிப் புணர்ச்சியில் வற்புறுத்தினார் எனவும் குற்றம் சாட்டப்பட்டார். பலர் முன்வந்து அவர் மீது புகார் கொடுக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
பிபிசியின் சீக்ரெட் ஸ்வாமி நிகழ்ச்சி : ( 2 Videos available in this post)
பிரபலத் தொலைக்காட்சியான பிபிசி சத்ய சாய் பாபாவின் சித்து வேளைகளையும், திருட்டுத் தனங்களையும் காட்சிப் படுத்தியும் சீக்ரெட் ஸ்வாமி என்னும் நிகழ்ச்சியினை ஜூன் 17, 2004-ம் ஆண்டு ஒளிப்பரப்பியது. குறிப்பாக பாபாவினாலும், பாபாவின் ஆசிரமத்திலும் நடத்தப்பட்ட பாலியல் குற்றங்களை அந்நிகழ்ச்சி படம் பிடித்துக் காட்டியது. ஆனால் இந்திய அரசின் ( வாஜ்பாய் ) நேரிடையான தலையீட்டால் அந்நிகழ்ச்சியினை இந்தியா முழுதும் மக்களிடம் சென்று சேர விடாமல் தடுத்துவிட்டனர்.
சாய் பாபாவின் சித்து வேளைகளும் ஏடி கோவூரும் :
சாய் பாபாவின் புகழுக்குக் காரணமே அவர் செய்யும் பெரும் மேஜிக் வித்தைகள் தான். அவர் கைகளில் இருந்து விபூதிக் கொடுப்பது, வாயில் இருந்து லிங்கம் எடுப்பதும், லட்டுக் கொடுப்பதும் போன்ற தந்திரங்களால் மக்களைக் கவர்ந்தவர். அப்படியான சாய் பாபாவின் சித்து வேளைகளை மக்களிடம் சொல்வதற்காக சாய் பாபாவினைப் போன்றே பிரபல பகுத்தறிவாளரான ஆபிரகாம் தோமஸ் கோவூர் விபூதிகளை கைகளில் இருந்து தந்திரமாக கொடுக்கும் காட்சியினை செய்துக் காட்டினார்.
பல முறை சத்ய சாய் பாபாவை நேரில் சந்திக்கவும், சாய் பாபாவின் தந்திரங்கள் பொய்யானவை என நிரூபிக்கவும் கோவூர் அனுமதிக் கேட்டும் சத்ய சாய் பாபா கண்டும் காணமலும் இருந்தார். ஒருமுறை சத்ய சாய் பாபாவைத் தேடி அவர் இருந்த பெங்களூரு ஆசிரமத்துக்கு நேரிடையாக வந்தும் - ஓடி ஒளிந்துக் கொண்டார் சத்ய சாய் பாபா.
நேரிடையாக சத்ய சாய பாபா தந்து அற்புதங்களை செய்துக் காட்டும் படி சவால் விட்டும், கடவுள் எனக் கூறிக் கொண்ட சத்ய சாய் பாபா ஓடி ஒளிந்துக் கொண்டார்.
நம்பிக்கையும் மூட நம்பிக்கையும் :
மக்கள் கடவுளை நம்பலாம், நம்பாமல் போகலாம் அவரவர் விருப்பமே, யார் வேண்டுமாயின் எந்த மதங்களையும் பின்பற்றலாம், அவரவர் தனிப்பட்ட விருப்பமே. ஆனால் நம்பிக்கை என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பதிலும், அதனை மூலதனமாக்கி கோடிக் கணக்கில் பணம், புகழ், அரசியல் அதிகாரங்கள், சுகங்கள் சேர்த்து வாழும் போலி மதவாதிகளை நம்ப வேண்டாம். அதனை விட முட்டாள் தனம் எதுவுமே இல்லை. ஒரு தனிமனிதனின் தன்னம்ப்பிக்கையை உசுப்பிவிடவும், தன்னம்பிக்கை கர்வமாய் மாறமல் இருக்கவுமே கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டுமே ஒழிய, மாறாக தன்னம்பிக்கையை மழுங்கடிக்கச் செய்யவும், புத்திக் கெட்டு அலையவும் இல்லை.
அரசியல் வாதிகள் செய்யும் ஊழல் பணங்களை ட்ரஸ்ட் என்ற பெயரில் பதுக்கி வைக்கவே இப்படியான கார்ப்பரேட் சாமியார்கள் உருவாக்கம் பெறுகின்றார்கள். சாமியார்களால் கொள்ளைக்கார அரசியல் வாதிகளுக்கு லாபம், அரசியல் வாதிகளால் கொள்ளைக்காரர்களால் லாபம். இப்படியான போலிகளிடம் உங்களின் நேரத்தையும், செல்வத்தையும், மானத்தையும் அடகு வைத்துவிட்டு அல்லோகல அல்லோகலப் படாதீர்கள்.
சச்சின் பாபாவின் காலில் விழுந்தாராம், ரணில் விக்கிரம சிங்கே விழுந்தாராம். சாய் பாபாவே நாத்திகர் என பறைசாற்றிக் கொண்ட கலைஞரின் வீட்டுக்கு வந்தாராம், அவர் உண்மையான சாமியார் என கருணாநிதி சொன்னாராம் என சும்மா ஊடக மயக்கத்தில் சிக்கி விடாதீர்கள்.
யார் வேண்டுமானாலும் நல்ல விசயங்களைப் பிரச்சாரம் செய்யலாம், தண்ணீர்க் கொடுக்கலாம், சோறுப் போடலாம் - அப்படியானவர்களைத் தலை வணங்குகின்றேன். ஆனால் இவற்றை சும்மா ஏமாற்றுவதற்கும் மக்களை மயக்குவதற்கும் பயன்படுத்தும் உத்திகளாக கைக்கொண்டு - சொத்து சுகங்களை சேர்த்து இராஜ வாழ்க்கை வாழ்வதற்கும் பயன்படுத்துகின்றார்கள்.
கடவுள் என்றே சத்ய சாய் பாபாவை வைத்துக் கொள்வோம் - அப்படி இருக்க அவருக்கு ஏன் இந்த வசதியான வாழ்க்கையும், சொத்துக்களும் என்பதே எனதுக் கேள்வி. ஏன் தன்னைக் கொல்ல வந்தவர்களை அறிந்துக் கொள்ளாமல் விட்டார். அப்படி கொல்ல வந்தவர்களை மன்னிப்பது தானே கடவுளின் குணம், அப்படி இருக்க அவர்களை தமதுப் படுக்கை அறையிலேயே வைத்துக் ஏன் கொல்ல வேண்டும், கொல்லப்பட்டதை ஏன் தடுக்க முடியவில்லை? ஏன் சுனாமியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை ? சரி விடுங்க ! அத்தெல்லாம் போனாலும் தன்னையே தான் காப்பாற்ற முடியவில்லையே............
ஏன் கடவுள் ஆதிக்கச் சாதியில் தான் பிறப்பாரா? ஏழை எளிய வீட்டில் பிறக்க மாட்டாரா? கடவுள் குதிரையிலும், காரிலும், ஏரோ ப்ளேனிலும் தான் போவாரா? நடந்துப் போக மாட்டாரா? கடவுளைத் தேடித் தான் எல்லோரும் போகணுமா? ஆயிரக் கணக்கான காசுகளைக் கொடுத்து நேரில் ஸ்பெஷல் தர்ஷன் பெறணுமா? ஏன் கடவுள் நம்மைத் தேடி வீட்டுக்கு வர மாட்டாரா? காசு இல்லாதவனை சந்திக்க மாட்டாரா? கடவுளுக்கு சமைக்கவும், துணி துவைக்கவும் வேலை ஆட்கள் இருக்கணுமா? ஏன் கிடைத்ததை உண்டு, தானே தனது உடுப்பை துவைக்க மாட்டாரா? ஏன் கடவுள் ஏகப்பட்ட சொத்துக்களையும், பணத்தையும் சேர்க்கணும்>? உலகமே அவருடையது தானே அப்படி இருக்க எதுக்கு அவருக்கு காணிக்கை, சொத்து, ட்ரஸ்ட், மண்ணாங்கட்டி எல்லாம்? ஏன் கடவுள் பிறந்து வாழ்ந்த பூமி மட்டும் தான் புனித பூமியா? உலகமே அவர் தான் படைச்சாரு அப்ப பூமியின் ஒருக் குறிப்பிட்ட பகுதி மட்டும் எப்படி புனிதம் ஆகும். கடவுள் பலரைக் குணப்படுத்தினாரு, ஆனால் அவரே சொந்த ஹாஸ்பிட்டல் டாக்டரைத் தான் நம்பி இருக்காரு.
- மனிதரில் புட்டபர்த்தி சாய்பாபாவும் ஒரு மனிதர்; நமக்கு ஒன்றும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவர் மனிதராக மட்டுமே இருந்திருக்கவில்லை. பகவானாகவும்(?) இருந்தார். அதனால்தான் சர்வசக்தி படைத்த அந்த பகவானுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாமா எனக் கேட்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அவர் மருத்துவமனை அமைத்தார்;அதில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளித்தார்; இது நல்ல செயல்தான்,வரவேற்கிறோம். ஆனால், இந்த நலப்பணிகள் செய்ய அவர் என்ன செய்து பணத்தை ஈட்டினார்? தன்னைச் சர்வசக்தி உள்ளவராகக் காட்டிக்கொண்டார். அதற்காக சில தந்திரங்களைக் கையாண்டார். அதில் ஒன்று, பகவான் பாபா நோயுற்ற ஒருவரைத் தொட்டார்; அந்த நோயாளியின் நோய் குணமானது என தன் பக்தர்களை நம்பச் செய்தது. இந்தச் செய்தியைப் பரப்பி அப்பாவிப் பக்தர்களைக் கவரும் போதுதான் பகுத்தறிவாளர்கள் கேட்டார்கள். சரி,இது உண்மையானால் சாய்பாபா ஏன் மருத்துவமனை கட்ட வேண்டும்? நோயாளிகளையெல்லாம் வரிசையாக நிற்க வைத்து சாய்பாபா அவர்கள் மீது கையை வைத்தால் போதுமே! நோய் பறந்தோடிவிடுமே!
அவ்வளவு ஏன், தனக்கே உடல்நிலை சரியில்லாத போது ஏன் மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார். அவர் பகவான் அல்லவா? அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்படலாமா?
இந்த சாய்பாபாவுக்கு முன்பு இருந்த சாமியார்கள் எல்லாம் பெரும்பாலும் பரம்பரையாக மடங்களை நடத்திவந்தவர்கள் மட்டும்தான்.அவர்கள் எந்த சித்து வேலைகளையும் செய்ததில்லை. தங்களின் சமயப் பிரச்சாரங்களை மட்டும்தான் செய்து வந்தார்கள்.இந்த சாய்பாபாதான் வெறும் கையில் லிங்கம் எடுப்பது, விபூதி கொடுப்பது, தங்கச் சங்கிலி கொடுப்பது என மாஜிக் வேலைகளைச் செய்து மக்களை ஏமாற்றியவர்.இவர்தான் தனியே ஒருவர் சாமியார் தொழில் செய்து பணம் ஈட்டலாம் என்னும் புதுத் தொழிலைக் கண்டுபிடித்தவர். இன்று நாட்டில் இருக்கும் பல சாமியார்களுக்கு இவர்தான் முன்னோடி. சுதந்திர இந்தியாவில் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்ட காலகட்டத்தில் மக்களைப் பின்னோக்கி இழுத்துச் சென்றவர்; மூடநம்பிக்கை நோயை அறிவியலின் துணையோடு பரப்பியவர். இதனை யார்தான் மறுக்கமுடியும்?
சாய்பாபா மறந்த நிலையில் அவரைப் புகழ்கின்றவர்கள் அவரது மருத்துவப் பணிகளை, இன்னும் சில மக்கள் தொண்டுகளைப் பாராட்டுகிறார்கள். இது அவரது ஒரு முகம். இதுவும், அவரது இன்னொரு முகத்தை மறைக்க அவர் அணிந்துகொண்ட முகமூடி முகம் அவ்வளவுதான். சுயமாகப் பொருளீட்டித் தொண்டு செய்பவர்களும், மூடநம்பிக்கையால் மக்களை ஏமாற்றிப் பொருள் சேர்த்து அதன் மூலம் தொண்டு செய்பவர்களும் ஒன்றா?
ஒருவர் இறந்து விட்டதாலேயே அவர் புனிதர் என்றும், அவரைக் குற்றமற்றவர் என்றும் சொல்லிவிட முடியுமா?
சாய்பாபாவைப் பற்றி நினைவுகூறுபவர்கள் அவரது அறப்பணிகளை மட்டும் கூறவில்லை.அவரது அற்புதங்களையும் கூறுகிறார்கள்.அதனால்தான் பகுத்தறிவாளர்களும் அந்த அற்புதங்களை அவர் எப்படி நிகழ்த்தினார் என்பதை எடுத்துச் சொல்லவேண்டியவர்களாக இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அவரது குற்றச் செயல்களையும் எடுத்துச் சொல்லவேண்டிய அவசியம் நேருகிறது.
சாய்பாபா செய்யும் மோசடிகளை முதன்முதலில் தோலுரித்துக் காட்டியது திராவிடர் கழகம்தான். அவர் எப்படி தன் கையில் இருந்து விபூதி வரவழைக்கிறார்? வாயில் இருந்து லிங்கம் எடுக்கிறார்? என்பனவற்றையெல்லாம் மக்களிடம் விளக்கியது. தொடர்ந்து இந்தப் பணிகள் பல்லாண்டுகளாக நடைபெறுவது ஒருபுறம் இருக்க, சாய்பாபாவின் புட்டபர்த்தி ஆசிரமத்தில் நடந்த குற்றச்செயல்களை வெளிப்படுத்துவதற்கென்றே பல வெளிநாட்டினர் தனியே இணையதளத்தையே தொடங்கி அதில் சாய்பாபாவின் சமூக விரோதச் செயல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றனர். ஆஹா பார்த்தீர்களா... வெள்ளைக்காரர்கள்கூட சாய்பாபாவின் பக்தர்களாக இருக்கிறார்கள் என்று இங்கே சிலர் சொல்லிவருவதைப் பார்க்கிறோம். அந்த வெள்ளைக்காரர்களில் சிலர்தான் சாய்பாபாவின் ஒழுக்கக்கேடுகளை இந்த இணையதளத்தில் அம்பலப்படுத்தியுள்ளனர். www.exbaba.com என்ற இணைய தளம் பாபாவை அக்குவேறு ஆணிவேறாக புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. சாய்பாபா பற்றி பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது இந்த இணையதளத்தின் நோக்கமாகும். ஏழு முதல் முப்பது வயது வரையுள்ள அவருடைய ஆண் பக்தர்களுடன் சாய்பாபா வைத்திருந்த பாலியல் உறவுகளைப்பற்றி நிறையச் செய்திகள் காணப்படுகின்றன.
இந்த இணைய தளத்தில், டேவிட், மற்றும் ஃபயே பெய்லி ஆகியோரின் கண்டுபிடிப்புகள் (Findings) எனும் அதிகாரப்பூர்வமான ஆவணம் இங்கு முதல் இடத்தைப் பெறுகிறது. டேவிட் மற்றும் ஃபாயே பெய்லி நீண்டகாலம் சாய்பாபாவின் பக்தர்களாக இருந்தவர்கள். தவறான பாலியல் உறவு, மோசடி, கொடுக்கப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகியவற்றுடன், சாய் பாபாவைக் கொலை செய்ய முயன்ற ஒரு செய்தியை அவர்கள் சொல்லுகிறார்கள். அதன் விளைவாகப் பல முக்கியமானவர்கள் சாய்பாபா இயக்கத்தில் இருந்து வெளியேறி விட்டனர்.
பெய்லியின் கண்டுபிடிப்புகளும், அவற்றிற்கு முன்னும் பின்னும் சொல்லப்பட்ட ஒவ்வொன்றும் இந்த இணையதளத்தில் ஆங்கில மூலத்தில் தரப்பட்டிருக்கிறது. முந்தைய பக்தர்கள் டச்சு மொழியில் கொடுத்துள்ள செய்திகள் ஆங்கில மொழிபெயர்ப்புகளாகத் தரப்பட்டுள்ளன.
சொல்லப்படும் செய்திகளை நம்ப முடியாமல் தலையாட்டுபவர்கள்கூட, திறந்த மனத்துடன் இணைய தளத்தைத் தொடர்ந்து படிப்பார்கள் என நம்புகிறோம். தங்களுடைய சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளத் தொடங்க ஆவல் கொள்ளுவார்கள் எனவும் நம்புகிறோம். உதவி செய்யவும் மேற்கொண்டு தகவல்களைத் தரவும் பலர் இருக்கிறார்கள் என்று இவர்கள் கூறுகிறார்கள்.
பாபாவின் போதனைகளில் முக்கியமாக வரும் பாலியல் பக்தரின் ஆன்மீகக் கண்ணோட்டத்தைக் குறைத்துவிடுகிறது. அவரின் ஆஸ்ரமத்தில் ஆண்களும் பெண்களும் தனித் தனியாகத்தான் தங்க வைக்கப்படுகின்றனர். திருமணமான தம்பதிகள் மட்டும் சேர்ந்து இருக்கலாம். கடந்த சில ஆண்டுகளாக இது மாறிவிட்டது. ஆண் பக்தர்களை மட்டும் பாபா தனியாக அழைத்து தரிசனம் தருகிறார். அப்போது எவரும் உடன் இருப்பதில்லை. எந்தப் பெண்ணையும் அவர் தனியாக அழைத்துப் பேசுவதில்லை.
பாபாவின் ஓரினச் சேர்க்கை பற்றி முதன் முதலாக எழுதிய அமெரிக்கா தால் ப்ரூக் 1970 - 71- இல் பாபாவுடன் ஒன்றரை ஆண்டுகள் தங்கியிருந்தார். தனி தரிசனங்களின் போது பாபா அவரைத் தழுவிக் கொண்டு அவரது பாலுணர்வைத் தூண்டினார் என்று அவர் கூறினார்.
1980-இல் மலேசிய இந்திய மாணவர்கள் ஒரு பெரும் பிரச்சினையை எழுப்பினர். சாய்பாபா தங்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாக அவர்களில் பலர் கூறியது ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாபா நிறுவியுள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, பாபா தங்களைக் கெடுத்துவிட்டதாக பல மலேசிய இந்திய மாணவர்கள் கூறினர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த கெய்த் ஹார்ட் என்பவர் 1990 இளவேனில் காலத்தில் பாபாவைத் தனியாகச் சந்தித்தபோது அவரைத் தழுவிக் கொண்ட பாபா அவரின் உறுப்பைத் தூண்டிவிட்டதாகக் கூறப்பட்ட பிரச்சினை ஹாலந்தில் 1992 ஜனவரியில் பேசப்படத் தொடங்கியது.
கடந்த ஆண்டு இதுபோன்ற பல கதைகள் வெளிவந்தன. இண்டர்நெட்டிலும் பத்திரிகைகளிலும் வந்த செய்திகளைத் தொகுத்து 20 புகார்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றில் 10 நிகழ்ச்சிகளைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களே நேரில் கூறியுள்ளனர். மற்ற 10 நிகழ்ச்சிகளில் இரண்டாம் தரப்பு மனிதர்கள் தகவல் தந்துள்ளனர்.
இத்தகைய தனிச் சந்திப்புகளின்போது பாபாவுடன் பாலியல் தொடர்பு கொண்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த தால் ப்ரூக், சாம், யங், 15 வயதுச் சிறுவன், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கான்னி லார்சன் இங்கிலாந்தின் கெயித் ஹார்டு, இரானின் செயித் கொராம் ஷெகல், ஜெர்மனியின் ஜென்ஸ் சேத்தி, ஆஸ்திரேலியாவின் ஹான்ஸ் டி க்ரேகர் ஆகிய 8 பேர் நேரடியாகத் தகவல் தந்துள்ளனர்.
பாபாவுடன் 16 ஆண்டுகளாகப் பாலியல் உறவு கொண்டதாக இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் பாடியா தெரிவித்துள்ளார். 1986_இல் பாபாவைச் சந்தித்த 23 வயது ஸ்வீடன் இளைஞர் (பின்னர் தற்கொலை செய்து கொண்டார்). இங்கிலாந்து நாட்டு மைக்கேல் பெண்டர் (பின்னர் தற்கொலை செய்து கொண்டார்) 1989-இல் பாபாவைப் பலமுறை தனியாகச் சந்தித்தவர், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 18 வயதுச் சிறுவன் 1998-1999-இல் பாபாவை 8 முறை தனியாகச் சந்தித்தவன், மற்றும் இந்திய மாணவர்கள் பலரும் சாய்பாபா தங்களுடன் பாலியல் உறவு கொண்டதாக ஒப்புக் கொண்டு தகவல் தந்துள்ளனர்.
பாபாவைத் தனியாகச் சந்தித்த போது தங்களின் உறுப்புகளைத் தூண்டிவிட்டதாக அமெரிக்காவின் எம்.டி., ஜெட் கெயர்ஹான், நெதர்லாந்தின் மாத்திஜிஸ் வான்டெர் மீர், இங்கிலாந்தின் டேவிட் பால் டிப்மெக் ஆகியோர் தகவல் தந்துள்ளனர்.
இதுவரை படித்தது பாலியல் குற்றச்சாட்டு.இனி கொலைக் குற்றச்சாட்டு.
சாய்பாபாவின் ஆசிரம வளாகத்தில் கொல்லப்பட்டவர்கள்
1993- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6- ஆம் தேதி இரவு பத்தரை மணி அளவில் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில் உள்ள கோயிலுக்குப் பக்கத்திலிருக்கும் சாய்பாபாவின் அடுக்குமாடிக் குடியிருப்பில் அவரது படுக்கை அறையில் இருந்த அபாயச் சங்கு ஒலித்தது.
புட்டபர்த்தி நகரத்தையே எழுப்பிய இந்த ஒலியைக் கேட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைத்தடிகளுடன் பாபாவின் படுக்கையறை நோக்கி ஓடினர்.
ஒருசிலர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்ட நிலையில், முதல்மாடியில் தங்கியிருந்த சாய்பாபா தனது அறையின் பின்பக்கக் கதவைத் திறந்து இன்னொரு அறைக்குச் சென்றார்.
ஒருமணி நேரம் கழித்து புட்டபர்த்தி காவல்நிலைய ஆய்வாளர் கே.என். கங்காதர் துப்பாக்கிகளுடன் வர துப்பாக்கிகள் சுடும் சத்தம் 12 முறை கேட்டது.
அடுத்ததாக ஒரு லோக்கல் போலீஸ் ஃபோட்டோகிராபர் புகைப்படம் எடுத்துவிட்டு வெளியே வந்து சொன்னபோதுதான்.... அங்கு என்ன நடந்தது என்பதை அறிய முடிந்தது.
தரைத் தளத்தில் பாபாவின் ஓட்டுநர் ராதாகிருஷ்ணமேனன், அவரது பியூன் மகாஜன் ஆகியோர் கோடரிகளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
மேலே ஒரு அறையில் சாய்பாபாவின் கல்லூரியில் படிக்கும் சுரேஷ்குமார், சாய்குமார் என்கிற இரண்டு மாணவர்களும், மரைன் என்ஜினியரான சாந்தாராம் ஜெகன்னாத் என்கிற பக்தரும் போலீசாரால் சுடப்பட்டு பிணமாகக் கிடக்கிறார்கள்.
பாபாவின் அந்தரங்க உதவியாளரான பாப்பையா ரத்தம் சொட்ட நின்று கொண்டிருக்கிறார். அந்தக் குடியிருப்பில் பிணங்களோடு கட்டுக் கட்டாக இந்திய , அமெரிக்க ரூபாய் நோட்டுகளும் சிதறிக் கிடக்கின்றன என ஃபோட்டோகிராபர் சொன்னதைக் கேட்டுப் பதறிய பக்தர்கள், பாபாவுக்கு ஒன்றும் ஆகவில்லையே என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு, பாபாவின் சகோதரர் ஜானகிராமன், போலீஸ் சுட்டுக் கொன்றார்களே இந்த 4 பேரோடு விஜய், ரவீந்திரா என மொத்தம் 6 பேர் கோடரிகளோடு பாபாவைக் கொலை செய்ய வந்தார்கள். அவர்களைத் தடுத்த டிரைவரையும் பியூனையும் கொலை செய்துவிட்டு பாபாவின் படுக்கை அறைக்குள் நுழைந்து அவரைக் கொல்லப் பார்த்தார்கள். அதைத் தடுத்த அந்தரங்க உதவியாளர் பாப்பையாவைக் கொல்ல முயலும்போது விழித்துக் கொண்ட பாபா, அவர் அறையிலிருந்த அலாரத்தை அலற வைத்துவிட்டு பின்கதவு வழியாகத் தப்பித்துச் சென்றுவிட்டார். கொலைகாரர்கள் 4 பேர் அறையில் பதுங்கிக் கொண்டார்கள். விஜய், ரவீந்திரா ஆகியோர் தப்பி ஓடிவிட்டார்கள். அறைக்குள் இருந்த 4 பேரையும் போலீஸ் பிடிக்க முயன்றபோது அவர்கள் போலீசைத் தாக்கினார்கள். போலீஸ் அவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டது என்றார்.
ஜூன் 7-ஆம் தேதி நடைபெற்ற இது உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அப்பொழுது வெளியான புகைப்படங்களில் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு கொலையாளிகளை நன்கு அடித்ததற்கான அடையாளங்கள் இருந்தன. கொலைச் சம்பவத்தைப் பற்றி எழுத்து மூலமாக யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை எனவே, சம்பவம் நடந்த 12 மணி நேரம் கழித்த பிறகு காவல் நிலைய ஆய்வாளர் கங்காதர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது என பத்திரிகைகள் எழுதின.
அப்போதைய மத்திய அமைச்சர் சவான் உட்பட வி.அய்.பிக்கள் பலர் வந்து பார்த்தனர். ஒருவாரத்திற்குப் பின்பு பக்தர்கள் மத்தியில் பேசிய பாபா, என்னை யாரும் கொலை செய்ய வரவில்லை என்றார். ஒரு மாதம் கழித்து தப்பி ஓடிய விஜய், ரவீந்திரா மகாராஷ்டிரா போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். நாங்கள் பாபாவுக்கு மிகவும் நெருக்கமான பக்தர்கள். பாபாவுக்கு வரும் நன்கொடைகளைச் சிலர் திருடுகிறார்கள். இதை பாபாவிடம் சொல்லப் போனோம். ஆதாராம் தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என்று பாபா சொல்லிக் கொண்டிருக்கும்போது - கீழ் அறையில் ஓட்டுநரை யாரோ அடிக்கும் சத்தம் கேட்டது. பாபா அறையில் இருந்த அலாரத்தை இயக்கினார். எங்களுடன் வந்த 4 பேரும் ஓரிடத்தில் ஒளிந்து கொண்டனர். நாங்கள் தப்பித்துவிட்டோம். பாபாவின் படுக்கையறைக்குப் பல முறை வந்து சென்ற பழக்கமுடையவர்கள் நாங்கள் என்றார்கள்.
எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் நடக்கவில்லை என்ற பாபாவின் பேச்சைத் தொடர்ந்து, லோக்கல் போலீஸ், சி.பி.அய். விசாரணை வரை சென்ற அந்த வழக்கில் 18 வருடங்களாகியும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. எங்களுக்கு நியாயம் வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள் இறந்தவர்களின் உறவினர்கள்.
இதுவும் பாலியல் குற்றச்சாட்டுதான்.
6.-12.-2000 நாளிட்ட இந்தியா டுடே இதழில் வெளிவந்தது.
பாபா ஆசிரமப் பள்ளி, கல்லூரிகளில் உள்ள இளம் மாணவர்களையும் பாபா பாலியல் பாலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார். தற்போது சிங்கப்பூரில் வேலை பார்க்கும் கிருஷ்ணகுமார், என் வகுப்புத் தோழர்களில் நான்கு பேர் எப்படி பாபா அவ்வப்போது தங்கள் உறுப்பில் எண்ணெய் தடவிப் பார்ப்பார் என்று விவரித்திருக்கிறார்கள் என்கிறார்.
ஆனால், பாபாவின் மோகம் முப்பது நாள்தான். பாபா கைவிட்ட பையன்கள் மிகுந்த நையாண்டிக்கும் மன உளைச்சலுக்கும் பதற்றத்திற்கும் ஆளாவார்கள். இதை வெளியாரிடம் ஏன் பெற்றோரிடமேகூடச் சொல்ல முடியாது. ஏனெனில், அவர்களே பாபா பக்தர்களாக இருப்பதுதான் காரணம்.
இந்தியாவில் தற்போதைக்கு பாபா மீது குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவாகவில்லை. அப்படியெனில் பெரும்பாலான பாபாவின் பாலியல் ஒழுங்கீனங்கள் மேற்கத்திய நாட்டினருடன் மட்டுமே நடந்ததா? அமெரிக்கரான ஜெட் கேயெஹார்ன் இதை மறுக்கிறார். பாபா தன்னை 16 வயதில் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சொல்லும் அவர் மேற்கத்திய இளைஞர்கள் பயமின்றி வெளியே சொல்கிறார்கள். இந்தியச் சிறுவர்கள் உள்நாட்டிலேயே இருப்பதால் பயத்தில் மூச்சு விடுவதில்லை; அவ்வளவுதான்என்கிறார். பாபாவிற்கு இந்தியாவெங்கும் செல்வாக்கு இருப்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
மேற்கத்திக்காரர்களில்கூட ஒருவரைத் தவிர வேறு யாரும் பாபாவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லவில்லை. எல்லாக் குற்றச்சாட்டுகளும் இந்தியச் சட்ட வரம்பிற்கு உட்பட்டவையாதலால் பாபாவைக் கோர்ட்டுக்கு இழுக்கும் செல்வாக்கு தங்களுக்கு இல்லை என்பதைப் பாதிக்கப்பட்டவர்கள் உணர்ந்திருப்பதே காரணம் என்கிறார்கள் விமர்சகர்கள். தவிர, இந்தியாவில் வழக்கைப் பதிவு செய்தாலும் ஓரினச் சேர்க்கை வன்முறையை நிரூபிப்பது கடினம். அத்தகைய குற்றம் இ.பி.கோ. பிரிவு 377- இன் கீழ் வரும் என்றும் இதன்படி ஹோமோசெக்ஸூவல் வன்முறை (ஸோ டோமி) உறவு சட்டப்படி தவறு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று கிரிமினல் சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால், எழுந்துள்ள புகார்களில் எதுவுமே வன்முறை பற்றிச் சொல்லாததால் முறை கேடாக நடந்து கொண்டதை நிரூபிப்பது கடினம் என்கிறார்கள்.
ஆனால், முன்னாள் சாய் பாபா பக்தர்கள் விடுவதாக இல்லை என்கிறார்கள். ஏதாவது ஒரு வகையில் சட்ட நடவடிக்கையை முடுக்கிவிட்டால் நெருக்கடி தாங்காமல் ஏதேனும் நடக்கும் என்று அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. பாபாவின் பக்தராக 26 வருடங்கள் இருந்த க்ளென் மெலாய் என்பவர் தற்போது பாபாவால் பாதிக்கப்பட்டவர்களை ஒன்று திரட்டி வருகிறார். ஒரு காலத்தில் பாபாவைக் கடவுளுக்கும் கடவுளாக ஈடுபாடு காட்டி மதித்தேன். இப்போது அவரது முகத்திரையைக் கிழிப்பதில் உறுதியாக இருக்கும் ஒருவருடன் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். என்கிறார் உறுதியோடு. ஆனால், உண்மைதான் பிடிபடாமல் நழுவுகிறது.
- சான்ஃபிரான்ஸிஸ்கோவிலிருந்து ஆர்தர் ஜே.பயஸூடன்.
சிட்னியைச் சேர்ந்த ஹன்ஸ் டி க்ரேகர் 5 ஆண்டுகள் பாபாவின் தீவிர பக்தராக இருந்தார். நவம்பர் 12 தேதியிட்ட த சண்டே ஏஜ் என்ற பத்திரிகையில் முதல்முதலில் பாபாமீது செக்ஸ் குற்றம் சுமத்தினார்.
குற்றச்சாட்டு (அவர் இந்தியா டுடேக்குக் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தின்படி): நான் அவர் காலைத் தொட்டு வணங்கிய போது அவர் என் தலையை அவரது இடுப்புப் பகுதியில் வைத்து அமுக்கினார். அவர் பிடி லேசாகத் தளர்ந்ததும் நான் என்னை விடுவித்துக் கொண்டேன். பாபா அவர் ஆடையை விலக்கி அரை குறையாக எழும்பியிருந்த அதைக் காட்டினார். நீ அதிர்ஷ்டசாலி என்று சொல்லி அவர் இடுப்பை என் முகத்தில் அழுத்தப் பார்த்தார். நன்கு யோசித்த பிறகு நான் இதைச் செய்ய இங்கு வரவில்லை என்று முடிவு செய்தேன். அவர் மனம் தான் எனக்கு வேண்டும் என்று பாபாவிடம் சொன்னேன். அவர் தன் உடைகளைக் களைந்துவிட்டு, அவர் மனம் என்னிடம்தான் இருப்பதாகச் சொன்னார். இப்படி கையும் களவுமாக மாட்டிக் கொண்டார் பாபா.
என்ன நிலை? பாபாவுக்கு எதிராக க்ரேகர் காவல் துறையில் புகார் எதுவும் இதுவரை கொடுக்கவில்லை. ஆசிரம நிருவாகமோ பதில் சொல்ல மறுக்கிறது.
ஜேன் சேத்தி ம்யூனிச்சுக்குக் குடியேறிய ஜெர்மானியர் ஒருவர் பத்து ஆண்டுகள் பாபாவின் விசுவாசியாக இருந்தார். செப்டம்பர், 18 தேதியிட்ட ஃபோகஸ் என்ற இதழில் பாபாமீது செக்ஸ் குற்றம் சுமத்தினார்.
குற்றச்சாட்டு (அவர் இந்தியா டுடேக்குக் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தின்படி): ஒரு தனி அறையில் வைத்து பாபா என்னை அருகில் வரச்சொன்னார். என் உதட்டோடு உதடாக முத்தமிட்டார். பயப்படாதே. இது நல்ல வாய்ப்பு. இதற்காக பலர் மாதக் கணக்கில் காத்திருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் கிடைக்காதது உனக்குக் கிடைத்திருக்கிறது என்றார். பேன்ட் ஜிப்பை அவிழ்த்து, அந்தப் பாகத்தில் கை வைத்தார். ஆனால், என்னுடைய அது எழும்பவில்லை. காரணம், எனக்கு செக்ஸில் ஆர்வமில்லை. நான் மிகவும் வெறுத்துப் போனேன். அது ரொம்பத் தளர்வா இருக்கு. ஆற்றலை வீணாக்காதே என்று அசிங்கமாகப் பேசினார். அன்றுதான் அவர் சுய ரூபத்தைப் புரிந்துகொண்டேன்.
என்னநிலை: சேத்தி ம்யூனிச்சில் பாபாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருக்கிறார். ஆசிரமம் இந்த விஷயத்திலும் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது.
ஸ்வீடனின் கானி லார்சான் 21 வருடங்களாக பாபா பக்தர். அவரது குற்றச்சாட்டுகளின் ஒரு பகுதி லண்டன் த டெய்லி டெலிகிராப் நாளிதழில் அக்டோபர் 20 அன்று வெளியானது.
குற்றச்சாட்டுகள் (இந்தியா டுடேயிடம் கூறியபடி): பாபா என்னைப் பல தனிப்பட்ட நேர்காணலுக்காக அழைத்தார். அவர், தான் கடவுளென்றும் எனது பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகிறேன் என்றும் சொன்னபோது நம்பினேன். ஆனால், அவர் எனது பிறப்புறுப்புகளைத் தொட்டு எண்ணெய் பூசி விட்டார். மைதுனம் செய்துவிட்டார். அவருக்கும் அதையே செய்யுமாறு என்னையும் கேட்டார். அவர் என்னோடு பலமுறை ஓரல் செக்ஸிலும் ஈடுபட்டார். அவர் என்னிடமும் அப்படியே செய்யும்படிக் கேட்டபோது நான் பின்வாங்கினேன்.
நிலைமை: முறையாக புகார் பதிவு செய்யப்படவில்லை. ஆசிரமம் வாய் திறக்க மறுக்கிறது.
நிழல் ஆட்டம்
சர்ச்சை என்பது சாய்பாபாவுக்கு இன்னொரு பெயர். ஒன்றுகூட நிரூபிக்கப்படவில்லை யென்றாலும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
இவை சாய்பாபாவின் இன்னொரு முகத்தைக் காட்டும் செய்திகள். சில ஆண்டுகளுக்கு முன்னால் சர்ச்சையில் சிக்கிய திருவண்ணாமலை நித்தியானந்தாவைக் கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள். இவரைப் போன்ற பலருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்தான் தற்போது மறைந்த சத்ய சாய் பாபா. பகவானின் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளும், கொலைக் குற்றச் சாட்டுகளும், குற்றங்களும் இன்னும் அப்படியே இருக்கின்றன. ஆனால், மதச் சார்பற்ற நாடு என்று அரசியல் சட்டம் வருணிக்கும் இந்தியா, இந்த பகவானுக்கு அரசு மரியாதை கொடுத்து அடக்கம் செய்திருக்கிறது.
- மணிமகன்
உண்மையை உணர்ந்த பாபாவின் பக்தர்
1985களில் மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்த தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் சாய்பாபாவின் மோசடிகளைத் தோலுரித்துக் காட்டினார். அப்போது அங்குள்ள சாய்பாபா பக்தரான வழக்குரைஞர் ஜெயராமன் என்பவர் சாய்பாபாவைப் பற்றிப் பேசக்கூடாது என்று கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதனைச் சந்திக்கத் தயார் என்று வீரமணி அவர்களும் பதில் நோட்டீஸ் அனுப்பினார்.
பிறகு அவர்களிடமிருந்து மூச்சுப் பேச்சில்லை; இரண்டு வருடங்களுக்குப் பிறகு திடீரென்று அதே வழக்குரைஞர் திரு. ஜெயராமன் அவர்களிடமிருந்து ஒரு பதிவு அஞ்சல் வந்தது. (அவரது வழக்குரைஞர் குழுமம் ராம் - ரெய்ஸ் - யாப் ஒரு தமிழர், ஒரு சீனர், ஒரு மலாய்காரர்).
அதில், என்னை உங்களுக்கு நினைவு இருக்குமென்று நினைக்கிறேன். முன்பு புட்டபர்த்தி சாய்பாபா பக்தனாக இருந்து உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய வக்கீல் நான். நீங்கள் சாய்பாபாபற்றிக் கூறியது - 100 க்கு 100 உண்மை என்பது இப்போது எங்கள் அனைவருக்கும் புரிந்துவிட்டது. எப்படியெனில், எங்கள் இளைஞர்கள் பலரை சாய்பாபாவிடம் ஓயிட்பீல்ட் ஆசிரமத்திற்கு ஆன்மீகப் பயிற்சிக்காக அனுப்பினோம். அவர்களிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டார். (Sodomy) ஆண் புணர்ச்சி மற்றும் பலவிதமான ஒழுக்க ஈனத்திற்கு அவர்களை அழைத்துக் கெடுத்துள்ளார். அந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து பாபா படங்களைக்கூட போட்டு உடைத்துவிட்டோம். அவர் பற்றிய ஒரு நூலைக் குறிப்பிட்டீர்கள்; அதன் பிரதி இருந்தால் எங்களுக்கு அனுப்பி வைத்து உதவுங்கள் என்று எழுதினார்.
1980-களின் நடுவில் தால் ப்ரூக் அவதார் ஆஃப் நைட் நூலை எழுதினார். பாபாவின் 20 வருடங்களுக்கு முந்தைய காம லீலைகளை அவர் விவரித்திருந்தார். பாபாவின் பக்தர்கள் அதை மறுத்தார்கள். பணம் சம்பாதிக்கும் குறுக்கு வழி என்று குறிப்பிட்டார்கள். இப்போது அதன் இரண்டாம் பதிப்பு வந்திருக்கிறது.
பாபாவுக்கு எதிராக செக்ஸ் குற்றம் சுமத்தும் முன்னாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது. வெளிநாட்டவர்கள் மட்டுமின்றி இந்தியர்களும்கூட அவ்வாறு புகார் கூறுகிறார்கள். ஆனால், புகார் கூறும் யாரும் இந்தியாவில் வசிக்கவில்லை.
எந்தக் குற்றச்சாட்டுக்கும் சாய்பாபா ஆசிரமத்திடமிருந்து பதில் இல்லை.
எந்தக் குற்றச்சாட்டுக்கும் சாய்பாபா ஆசிரமத்திடமிருந்து பதில் இல்லை.
(இந்தியா டுடே டிசம்பர் 6, 2000)
எவ்வளவு அருவருப்பான மனிதத் தன்மைக்குச் சற்றும் பொருந்தாத கேவலமான மனிதர் இந்தப் பேர் வழி என்று உணர்ந்து கொள்ள இன்னும் தயக்கமா?
ஒழுக்கத்தைப் பாழடிக்கும் பக்தி, அறிவை அபகரித்து அறியாமைக் குழிக்குள் நம்மைத் தள்ளும் பக்தி போதையிலிருந்து விடுபட வேண்டாமா?
சமாதியான சாமியார்
சாய்பாபா மரணமடைந்த போது பத்திரிகைகள் ஸித்தியடைந்தார் என்றும் முக்தியடைந்தார் என்றும் செய்திகள் வெளியிட்டன. அதைப் படித்தபோது, ஜி. நாகராஜன் எழுதிய இந்தக் கதை நினைவுக்கு வந்தது.
மடத்துக்கு முன்னால் ஒரே கூட்டம். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். அத்தனை பேர் முகத்திலும் வருத்தம் தோய்ந்திருந்தது. குசுகுசு என்று மட்டுமே பேசிக்கொண்டனர்.
சாமியார் சமாதியாகிவிட்டார். இன்று காலை தியானத்தில் உட்கார்ந்திருந்தவர்தானாம், அப்படியே சமாதியாகிவிட்டார் என்றெல்லாம் பேசிக் கொண்டனர்.
ஊர்ச் சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தின் நடுவே குறுக்கும் நெடுக்குமாகச் சென்று கொண்டிருந்தனர். என்னவென்று புரிந்து கொள்ளாமலேயே அவர்களும், சாமியார் சமாதியாகிவிட்டார் என்ற வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டனர். இறுதியில் மடத்துக்காரர்கள் சாமியாரை வெளியேகொண்டு வந்தனர். சாமியார் வெளியே தூக்கி வரப்படுவதையே உற்று நோக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் திடீரென்று, டேய், சாமியார் செத்துப் போயிட்டாரு என்று கத்திக் கொண்டு கூட்டத்தை விட்டு ஓடிவந்தான். உடனே, அத்தனை சிறுவர்களும், மடத்துச் சாமியார் செத்துப் போயிட்டாரு என்று அழுத்தம் திருத்தமாகக் கத்திக் கொண்டு ஓடினர். பெரியவர்கள் சிறுவர்களைக் கூட்டத்தைவிட்டு அரட்டி மிரட்டி ஓட்டினர்.
- நூல்: ஜி.நாகராஜன் ஆக்கங்கள், பிரிவு: நிமிஷக் கதைகள், தொகுப்பு: ராஜமார்த்தாண்டன், பக்கம்: 433, 43.
சாய்பாபா பற்றி தஸ்லிமா நஸ் ரீன்
சாய்பாபாவின் மரணம் குறித்தும், இதற்காக கிரிக்கெட் விளையாடாமல் பிரார்த்தனை செய்வதாக அறிவித்த சச்சின் டெண்டுல்கர் குறித்தும் விமர்சனம் செய்துள்ளார் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்.
தற்போது ஸ்வீடன் நாட்டுக் குடியுரிமையைப் பெற்று ஸ்வீடனில் பாதுகாப்புடன் வசித்து வரும் இந்த நிலையில், சாய்பாபாவின் மரணம் குறித்தும், இதற்காக பிரார்த்தனை செய்யுமாறு சச்சின் டெண்டுல்கர் விடுத்த அழைப்பையும் தஸ்லிமா விமர்சித்துள்ளார்.
ஏன் சாய்பாபாவின் மரணத்திற்காக மற்றவர்கள் சோகமாக இருக்க வேண்டும். அவருக்கு 86 வயதாகி விட்டது. அவரை மரணமடைய அனுமதிப்பதுதான் சரியானது, நியாயமானது. சச்சின், அவருக்காகப் பிரார்த்தனை செய்வதாகக் கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது என்று கூறியுள்ளார் தஸ்லிமா.
இதேபோல இன்னொரு செய்தியில், சாய்பாபா இறந்து விட்டார். 2022 ஆம் ஆண்டுதான் இறப்பேன் என்று முன்பு அவர் கூறியிருந்தார். ஆனால் அதற்கு முன்பே இறந்து போய் விட்டார் என்று கிண்டலடித்துள்ளார்.
யாரும் சாய்பாபாவின் அஸ்தியைத் தங்களது விரல் நக இடுக்குகளில் மறைத்து எடுத்துக் கொண்டு வந்து அதைப் பத்திரப்படுத்த முயல மாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று சற்று காட்டமாகவே விமர்சித்துள்ளார்.
ஒரு பாபா போய்விட்டார். இனி ஆயிரக்கணக்கானோர் அந்த இடத்தைப் பிடிக்க முயல்வார்கள். காரணம், பக்தி பிசினஸ் தற்போது நல்ல லாபகரமானதாக இருப்பதால் என்று கூறியுள்ளார்.
பாபா குறித்த தஸ்லிமாவின் கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
போங்கப்பா ......... !!! உங்களை மாதிரி ஆளுங்களால் கடவுள் நம்பிக்கையே இல்லாமல் போச்சுங்க !!!
பாபா இறந்ததும் பிரசாந்தி நிலையத்தில் பாம்பு வந்ததாம். சோ வாட் ! எங்க வீட்டு மாடியிலயும் தான் நிறைய பாம்பு வந்திருக்கு.
Updated on 2012.06.25
சாய்பாபா...பலருக்கு மனிதராக அவதரித்த கடவுளின் அவதாரம்..மனிதன் எப்பொழுது தான் கடவுள் என அறிவிக்கிறானோ அப்பொழுதே உண்மையான ஆன்மீகம் அவ்விடத்தில் தோற்றுவிடுகின்றது..இது நாம் அனுபவத்தால் கண்ட உண்மையும் கூட...வாரம் ஒரு மூலிகை மாதிரி வாரம் ஒரு சாமியார் என்றவகையில் பதிவு எழுதலாம் என்றால் பாத்துக்கொள்ளுங்கள்...சாமியார் என்றுவந்து விட்டாலே சர்ச்சைதான்..அது சாய்பாபாவை விட்டு வைக்குமா என்ன? சாய் பாபா போன்றவர்கள் உருவாவதற்கான அத்தனைச் சாத்தியங்களையும் இந்து மதம் கொண்டிருக்கிறது. இந்து மதம் தனிநபர் வழிபாட்டையும் தெய்வமாக்கல் கோட்பாட்டையும் ஆதரிக்கிறது. தமக்கு தீமைகள் நடைபெறும் போது கடவுள் மனித உருவில் வந்து காப்பாற்றுவார் என்பது நமது 98% ஆன சமயக்கதைகளின் சாரம். இதனால் பலர் தாம் கடவுள் என அறிவித்துக்கொள்வதுடன் அவர்கள் வசம் இருக்கும் கண்கட்டு வித்தைகளினால் மக்கள் இலகுவாக ஈர்க்கப்படுவதுடன் மக்களின் அறிவுக்கண்களும் சேர்ந்தே கட்டப்பட்டுவிடுகின்றன.இப்பதிவு சாய்பாபாவின் சர்ச்சை பற்றியது.கீழே சில காணொளிகளும் இடப்பட்டிருக்கின்றன.அவற்றையும் பாருங்கள்.
உண்மையான அற்புதம் காலத்தைக் கடந்து மனதைத் தாண்டி நிலவுதல் மட்டுமேதான். அத்தகைய நிலை பெற்றவர்கள், பொதுவழக்கில் ‘அற்புதங்கள்’ என்று கருதப்படுகின்றவற்றை மதிப்பதில்லை.
அவர்களைப் பொறுத்தவரை, மிகச் சாதாரணமான சின்னச் சின்ன விஷயங்களிலேயே அற்புதம் பொதிந்துள்ளது. சாதாரண வாழ்வினைப் புத்துணர்வுடன் சந்திக்க கூடிய நுட்ப உணர்வோ உக்கிரமோ அற்றவர்கள்தான், அற்புதங்களைக் கௌரவிப்பார்கள்.
சத்தியசாயி பாபா என்பவர் அற்புதங்களின் மூலம் மட்டுமே பிரசித்திபெற்றவர். இவரைப் பத்திரிகை ஆசிரியர்கள், விஞ்ஞானப் பேராசிரியர்கள், இலங்கையின் ஆபிரகாம் கோவூர் போன்ற பகுத்தறிவுவாதிகள் விமர்சித்திருக்கிறார்கள்.
இவர்களின் விமர்சனத்தின்படி சத்திய சாயிபாபா வெறும் கண்கட்டு வித்தைக்காரர். அற்புதங்கள் என்று எதுவுமே கிடையாது என்ற அளவுக்குப் போனவர்கள் கோவூரும் அவரைப் போலச் சிந்திப்போரும்.
(குளத்துத் தண்ணீரில் சைக்கிள் ஓட்டி மேஜிக்)
இஸ்ரேலின் யூரிகெல்லர், தம்மைத் தெய்வீகச் சக்தி பெற்ற அற்புதமனிதராக விளம்பரம் செய்தவர். நூலில் கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு சாவியை, உற்றுப் பார்ப்பதன் மூலம் மட்டுமே வளைப்பது அவரது அற்புதம். இது வெறும் கண்கட்டு வித்தை என்று நிரூபித்தவர் உலகத்தின் மிகப் பெரிய மாஜிக் நிபுணரான பிரதீப் சந்திர சர்க்கார். இவர் ஒரு வங்காளி.
டெலிவிஷன் காமிராக்களுக்கும் விஞ்ஞானப் பிரமுகர்களுக்கும் முன்னிலையில் யூரிகெல்லர் சாவியை ‘உற்றுப் பார்த்து’ ஒரு புறம் வளைத்தபோது அதே சாவியை அதேபோல் ‘உற்றுப் பார்த்து’ எதிர்ப்புறமாக வளைத்தார் பி.சி.சர்க்கார்.
அவரது தீர்ப்பு; ‘தெய்வீக சக்தி மூலமாக இதைத்தாம் செய்ததாக கூறுகிறார் யூரிகெல்லர். நான் இதையே வெறும் மாஜிக் மூலம் செய்துள்ளேன். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு விஷயமறிந்த வட்டாரங்கள், யூரிகெல்லரைப் பற்றிப் பேசுவதே இல்லை.
பி.சி.சர்க்காரின் மூலம்தான், சத்திய சாயிபாபாவின் அற்புதங்களுக்கு கூட அதிர்ச்சித் தாக்குதல் கிடைத்தது. இந்நிகழ்ச்சியை சர்க்கார் விவரித்துள்ளார். ‘சாயிபாபாவும் நானும் ஒன்றாகவே மாஜிக் படித்தவர்கள். நான் அவரிடம் இன்டர்வியூ கேட்டபோது மறுத்துவிட்டார். ஆகவே நான் வேறுபெயரில் மீண்டும் கேட்டு அவரைச் சந்திக்க ரூமுக்குள் காத்திருந்தேன்.
அங்கே மேஜையில் நிறைய ஸ்வீட் வகைகள் இருந்தன. உள்ளே வந்த சாயிபாபா, வெற்று வெளியிலிருந்து எடுப்பது போல ஒரு ஸ்வீட் வரவழைத்து, என்னிடம் கொடுத்தார். ‘நான் எனக்கு அந்த ஸ்வீட் பிடிக்காது. இதுதான் பிடிக்கும்’ என்று வேறு ஒரு வகை ஸ்வீட்டை வரவழைத்துக் காட்டினேன். அவரும் நானும் செய்தது ஒரே மாஜிக்கைத்தான். இருவருமே அதற்காக அதே ரூமிலிருந்த ஸ்வீட்டுகளைத்தான் உபயோகித்தோம்.
உடனே என்னை அடையாளம் கண்டுகொண்டு உணர்ந்த சாயிபாபா ‘ஓ’ என்று கத்தினார். மறுவிநாடி, ரூமுக்குள் குண்டர்கள் புகுந்து என்னை வளைத்து, ‘இங்கிருந்து உயிரோடு வெளியே தப்பிப் போக முடியாது’ என்றனர். ‘என்னால் முடியும்’ என்று பதில் கூறிய நான் அதைச் செய்து காட்டினேன்.
யூரிகெல்லரும் சாயிபாபாவும் மாஜிக்காரர்கள் என்று கூறுகிற பி.சி.சர்க்கார் கருணையின் சிகரத்தில் நிலவியபடி உண்மையான அற்புதங்களை செய்வோரை தாம் சந்தித்திருப்பதாகவும் கூறுகிறார். அத்தகையவர்களைத் தேடிப் போவது அவரது ஆர்வங்களுள் ஒன்று.